IND VS ENG match at The Lord's cricket stadium news update in tamil: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நேற்று முன்தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்தியா முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிரடித் தாக்குதல் தொடுத்து இங்கிலாந்து அணியினரை கலங்கடித்தனர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது ஆக்ரோஷ பந்துவீச்சில் மொத்த விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து 110 ரன்னில் சுருண்டது. 'ஸ்விங்' பந்துவீச்சு தாக்குலில் அட்டகாசப்படுத்திய பும்ரா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பேட்டிங்கில் தொடக்க வீரரான கேப்டன் ரோகித் மிரட்டல் அடி அடித்தார். அதிலும் அவருக்கு பிடித்த 'புள்' ஷாட்டை அதிக முறை அடித்து சிக்சருக்கு பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க வீரரான தாவன் பொறுமையாக மட்டையை சுழற்றி தனது பாணியில் சில பவுண்டரிகளை ஓடவிட்டார். இந்த ஜோடி அசத்தல் பாட்னர்ஷிப் இந்தியா முதல் முறையாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாட உதவியது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் களமாடும். அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை. இடுப்பு வலியால் அவதிப்படும் கோலிக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆட்டத்தில் விக்கெட் வேட்டை நடத்த முடிவெடுத்த இந்தியா தொடர்ந்து வேகப்பந்துவீச்சிற்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால், இன்றைய ஆட்டம் நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நிலைமைகள் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இங்கிலாந்து மைதானங்களின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறுபவையாகும். மேலும், லார்ட்ஸில் இருக்கும் சாய்வு போன்ற அமைப்பும் ஒரு காரணியாக இருக்கலாம்.
சொந்த மண்ணில் தொடக்க ஆட்டத்தில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று விளையாடி வருகிறது. அதே நேரத்தில், ரோகித் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இன்றைய ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 247 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தரப்பில், யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, ரீஸ் டாப்ளே பந்தில் எல்பி டபில்யூ முறையில் டக் அவுட் ஆனார். ஷிகர் தவான் 9 ரன்களில் அவுட் ஆனார். விராட் கோஹ்லி பைரான் கார்ஸ் பந்தில் காட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆனதால் இந்திய அணி 38.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இதனால், இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் ரீஸ் டாப்ளே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil