இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று புதன்கிழமை மாலை 3:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
பும்ராவுக்கு ஓய்வு
இந்தப் போட்டியில் இருந்து மூத்த வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இதேபோல், முந்தைய போட்டியில் ஆடிய சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகிய மூவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் - இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல் ராகுல் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்ற நினைத்த நிலையில், ராகுல் 2 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு ஜெய்ஸ்வால் - கருண் நாயர் ஜோடி சேர்ந்த சூழலில், 5 பவுண்டரியை விரட்டிய கருண் நாயர் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனிடையே, சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து, ஜெய்ஸ்வால் - கேப்டன் கில் ஜோடி அமைத்தனர். இருவரும் விக்கெட் சரிவை திறம்பட மீட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களுக்கு மேல் வந்தன.
இந்த ஜோடியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். அதைத் தொடர்ந்து, கேப்டன் கில் - ரிஷப் பண்ட் ஜோடி கரம் கோர்த்தனர். இவர்களில் ரிஷப் பண்ட் 42 பந்துகளில் 25 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர், களமிறங்கிய நிதிஷ் குமாரும் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜா களமிறங்கினார். இதனிடையே, தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் விளாசினார். அதன்படி, 216 பந்துகளில் 114 ரன்களை அவர் குவித்தார். மறுபுறம், 67 பந்துகளில் 41 ரன்களை ஜடேஜா குவித்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
அந்த வகையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 310 ரன்களை குவித்தது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர்.