IND vs ENG 4th T20I Live scores and updates: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.
இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா தரப்பில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை சாகுப் மஹ்மூத் வீழ்த்தினார். மற்றொரு புறம், திலக் வர்மா மற்றும் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
மேலும், அபிஷேக் ஷர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் முறையே 29 மற்றும் 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 79 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. எனினும், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியே இணைந்து ரன்களை அதிரடியாக குவித்தனர். 30 பந்துகளில் 53 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை ஜேமி ஓவர்டன் வீழ்த்தினார்.
மேலும், அக்ஸர் பட்டேல் 5 ரன்களிலும், அர்ஷிதிப் சிங் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆடமிழந்தனர். எனினும் அதிரடியாக ஆடிய துபே, 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இறுதியாக, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தின் மஹ்மூத் மூன்று விக்கெட்டுகளும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளும், ப்ரைடன் கார்ஸ் மற்றும் அதில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்படி, இங்கிலாந்து அணி வெற்றிபெற 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் இருந்து முதலில் களமிறங்கிய பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் முறையே 23 மற்றும் 39 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், 2 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை ரவி பிஷ்னோயிடம் இழந்தார்.
மறுபுறம் தனி ஆளாக போராடிய ஹேரி ப்ரூக் 51 ரன்கள் எடுத்த நிலையில், வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய பௌலர்களின் பந்து வீச்சில், இங்கிலாந்து வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர். லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பேத்தெல், மஹ்மூத் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக, ப்ரைடன் கர்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
இந்திய அணியில் இருந்து ரவி பிஷ்னொய் மற்றும் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஸர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முடிவில் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் இத்தொடரையும் இந்தியா கைப்பற்றியது.