இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) போட்டியை ரத்து செய்ததை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பிசிசிஐ உடனான உரையாடல்களைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் இன்று தொடங்கவிருந்த இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான ஐந்தாவது எல்வி = இன்சூரன்ஸ் டெஸ்ட் ரத்து செய்யப்படுவதை ஈசிபி உறுதிப்படுத்த முடியும். என குறிப்பிட்டிருந்தது.
இந்திய அணிக்குள் உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, இந்தியா ஒரு அணியை களமிறக்க முடியவில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டிராவில் முடிவடைந்தது. லண்டன் லார்ட்சில் நடந்த 2 ஆவது டெஸ்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. ஆனால், லீட்சில் நடந்த 3 ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. அடுத்து லண்டன் ஓவலில் நடந்த 4 ஆவது டெஸ்டில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
முன்னதாக, 4 ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பணியாற்றியதால் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இந்திய அணியினர் அனைவரும் ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
இதனால் இந்திய அணியினர் யாரும் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசனை நடத்தின.
இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வெளியானது. இருந்தாலும் 5 ஆவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது.
முன்னதாக, இந்திய வீரர்கள் வியாழக்கிழமை மாலை ஒரு சந்திப்பை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது, அப்போது பெரும்பான்மையான அணி உறுப்பினர்கள் ஐந்தாவது டெஸ்ட் விளையாட விருப்பமில்லாமல் இருப்பதாக தெரிவித்தனர். ஆதாரங்களின்படி, செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மீண்டும் தொடங்குவதால், வீரர்கள் கொரோனா ஆபத்து குறித்து எச்சரிக்கையாக உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.