9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
இதில், இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு டிரினிடாட் தாரூபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரைஇறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த அரைஇறுதிப் போட்டிக்கு மழை அச்சறுத்தல் நிலவுகிறது. கயானாவின் வானிலை முன்னறிவிப்பின்படி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு (உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு) நடைபெறவிருக்கும் இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?
இந்தியா - இங்கிலாந்து போட்டியின் போது மழை குறுக்கிட்டால், போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். பொதுவாக, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு, குறைந்தபட்சம் 10 ஓவர்கள் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பந்துவீசப்பட வேண்டும்.
முதல் அரையிறுதி உள்ளூர் நேரப்படி இரவு ஆட்டமாக இருந்ததால், திட்டமிட்ட நாளுக்கு மொத்தம் 60 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அரையிறுதி 1 -இன் ரிசர்வ் நாளுக்கான மொத்த கூடுதல் விளையாட்டு நேரம் 190 நிமிடங்கள் ஆகும்.
மறுபுறம், அரையிறுதி 2 -இன் திட்டமிடப்பட்ட நாளுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று விளையாடும் நிபந்தனைகள் கூறுகின்றன. அத்துடன், முதல் அரையிறுதிக்கு ஒதுக்கப்பட்டது போல் ரிசர்வ் டே கிடையாது.
இந்தியா - இங்கிலாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?
போட்டி சமனில் முடிந்தாலோ, வானிலை நிலைமைகள் சூப்பர் ஓவரை முடிப்பதைத் தடுத்தாலோ, அல்லது வானிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டாலோ அல்லது இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் முடிவடையவில்லை என்றாலோ, அதன் இரண்டாவது சுற்றில் முதல் இடத்தைப் பிடித்த அணி குழு (சூப்பர் 8) இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அதாவது, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் எந்த அணி தனது பிரிவில் முதலிடத்தில் இருந்ததோ, அந்த அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8-ல் குரூப் 1ல் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே
வருகிற ஜூன் 29ம் தேதி (சனிக்கிழமை) பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், அடுத்த 2 நாட்கள் ரிசர்வ் நாளாக இருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் போட்டி மழை காரணமாக நடைபெற விட்டால் இறுதிப் போட்டியாளர்களை கூட்டு வெற்றியாளர்களாக ஐ.சி.சி அறிவிக்கும். இரு அணிக்கும் கோப்பையும், பரிசும் பகிர்ந்து அளிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.