/indian-express-tamil/media/media_files/2025/10/19/indian-women-2025-10-19-17-33-44.jpg)
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக் கோப்பை போட்டித் தொடரின் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில், 4 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது..
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் மோதும் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் லீக் போட்டிகளில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது. முதல் 2 போட்டிகளில் முறையே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் முறையே தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியை தழுவியது.
இந்தநிலையில், இன்றைய முக்கிய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இரு அணிகளின் விளையாடும் வீராங்கனைகளின் விபரம்
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், ஸ்னே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்
இங்கிலாந்து: ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), டாமி பியூமண்ட், ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்ஸி, சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்
இங்கிலாந்து பேட்டிங்
தொடக்க வீரர்களாக டாமி மற்றும் ஏமி ஜோன்ஸ் களமிறங்கினர். ரன் சேர்க்க திணறிய டாமி 43 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து தீப்தி பந்தில் போல்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஹீதர் நைட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிய ஏமி அரை சதம் விளாசினார். இருப்பினும் 56 பந்துகளில் தீப்தி சர்மா பந்தில் மந்தனாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஏமி 8 பவுண்டரிகள் அடித்தார்.
அடுத்ததாக ஸ்கைவர் பிரண்ட் களமிறங்கினார். ஸ்கைவர் நிதானமாக கம்பெனி கொடுக்க, ஹீதர் அதிரடியாக விளாசி அரைசதம் கடந்தார். மறுமுனையில் ஆடிய ஸ்கைவர் 38 ரன்களில் வெளியேறினார். அடுத்து சோபியா களமிறங்கிய நிலையில், ஹீதர் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆட முயற்சித்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஹீதர் 91 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.
அடுத்து எம்மா களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடி வந்த சோபியா 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அலீஸ் 2 ரன்களிலே வெளியேறினார். சார்லெட் களமிறங்கினார். ஆனால் சிறிது நேரத்திலே மறுமுனையில் ஆடி வந்த எம்மா 11 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சோபி 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து லின்சி களமிறங்கி ரன் ஏதும் எடுக்காத நிலையில், இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சார்லெட் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 விக்கெட்களையும், ஸ்ரீ சாரணி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு கடின இலக்கு:
இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். பிரதிகா ராவல் 6 ரன்னிலும் அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 24 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினார்கள். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் ஸ்மிரிதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். ஹர்மன்பிரீத் கவுர் 70 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்தபோது, நட் சிவிர் புருண்ட் பந்தில் எம்மா லாப்ம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்துவந்த தீப்தி சர்மா அதிரடியாக விளையாடினார்.
ஆனால், ஸ்மிரிதி மந்தனா 94 பந்துகளில் 88 ரன்கள் அடித்திருந்தபோது, லின்ஸே ஸ்மித் பந்தில், ஆலிஸ் கேப்ஸியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 8 ரன்னில் அவுட் ஆனார். தீப்தி சர்மா 50 ரன்கள் அடித்திருந்தபோது, சோஃபி எக்லெஸ்டோன் பந்தில் சோஃபியா டன்க்ளேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில், 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இந்திய அணி 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திரம் தோல்வி அடைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.