IND vs HK Asia Cup 2022 Updates,| IND vs HK ஆசியகோப்பை 2022 நேரடி அறிவிப்புகள்: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், துபாயில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஹாங்காங் பவுலிங் தேர்வு; இந்தியா முதலில் பேட்டிங்!
இந்நிலையில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிஜாகத் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆயுஷ் ஷுக்லா பந்துவீச்சில் ஐசஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த கே.எல் ராகுல் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதன்பிறகு களத்தில் இருந்த விராட் கோலியுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். ரன்குவிப்பில் அதிரடி காட்டி வந்த இந்த ஜோடியில் விராட் கோலி 40 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் 22 பந்துகளில் அரைசதம் விளாசி மிரட்டினார். அதோடு, ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து சிக்சர் மழை பொழிந்தார் சூர்யகுமார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 44 பந்துகள் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரியை விரட்டிய கோலி 59 ரன்களும், 26 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளை சிதறவிட்ட சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹாங்காங் பேட்டிங்
ஹாங்காங் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷ்கத் கான் மற்றும் யஷிம் முர்டசா களமிறங்கினர். யஷிம் முர்டசா 9 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் அவுட் ஆனார். நிஷ்கத் கான் 10 ரன்களில் ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து களமிறங்கிய ஹயத் மற்றும் கின்சித் ஷா இருவரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஹயத் 35 பந்துகளில் 41 ரன் அடித்து ரவீந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். அய்சஸ் கான் 14 ரன்களில் போல்டானார்.
சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடிய கின்சித் ஷா 30 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அலி மற்றும் மெக்கன்சி அணியை வெற்றி பெற செய்ய கடினமாக போராடினர். இருப்பினும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
அலி 26 ரன்களிலும், மெக்கன்சி 16 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர், ஜடேஜா, அர்ஷ்தீப், அவேஷ் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஆடும் லெவன்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
ஹாங்காங்
நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்தாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி (விக்கெட் கீப்பர்), ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், ஆயுஷ் சுக்லா, முகமது கசன்ஃபர்
இந்தியா - ஹாங்காங் மோதல்
இந்திய கிரிக்கெட் அணி அதன் துவக்க ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இதனால், இன்றும் அதே முனைப்புடன் விளையாடி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முயலும். சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் ஒருநாள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதியுள்ளது. இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 286 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியில் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் திரட்டி மிரட்டினர். அதன் பிறகு மிடில்-ஆடரில் களமாடிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே, ஹாங்காங் அணியை எந்த வகையிலும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இந்திய வீரர்களை எச்சரித்துள்ளதுஅணி நிர்வாகம்.
ஆடுகளம் எப்படி?
துபாய் ஆடுகளத்தில் சேஸிங் செய்யும் அணிகளே அதிகம் வெற்றி பெற்றுள்ளன. எனவே, 'டாஸ்' ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீசவே நினைக்கும்.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்தியா
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
ஹாங்காங்:
நிஜாகத் கான் (கேப்டன்), கிஞ்சித் ஷா, அஃப்தாப் ஹுசைன், அய்சாஸ் கான், அதீக் இக்பால், பாபர் ஹயாத், தனஞ்சய் ராவ், எஹ்சான் கான், ஹாரூன் அர்ஷத், ஸ்காட் மெக்கெச்னி, கசன்ஃபர் முகமது, முகமது வஹீத், ஆயுஷ் த்ரிவே, அயுஷ் த்ரிவ் சுக்லா, , யாசிம் முர்தாசா, ஜீஷன் அலி.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.