வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடரில் விளையாடுகிறது. வழக்கமான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது. ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதனையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிட்ச் ரிப்போர்ட்
வில்லேஜ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளை ஆராயும்போது, ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் சாதகமாக இருப்பது தெளிவாகிறது. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 167 ஆக உள்ளது. எனவே, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிகபட்ச ஸ்கோரை எதிர்பார்க்கலாம். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்றாலும், பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தின் மேற்பரப்பில் குறைவான ஆதரவைப் பெறலாம்.
வரலாற்று ரீதியாக, டப்ளினில் சேசிங் செய்வதில் சிரமம் இருக்காது. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்யும். இந்த மைதானத்தில் மொத்தமாக 21 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 8 போட்டிகளிலும், முதலில் பவுலிங் செய்த 13 போட்டிகளிலும் வென்றுள்ளன. மேலும், இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 151. சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 137 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 252, குறைந்தபட்ச ஸ்கோர் 70 ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil