நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை ஹர்திக் பாண்டிய தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Advertisment
ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இதில், 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 27) ஞாயிற்றுக்கிழமை 2-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாக தொடங்கியது. மழையால் போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தவான் - சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்தனர். தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சூரியகுமார் அதிரடி காட்டினார். சுப்மன் கில் - சூரியகுமார் இணைந்து ரன்களை துரத்தினர். சிறப்பாக சென்ற ஆட்டம் மழையால் மீண்டும் தடைபட்டது. சுப்மன் கில் 42 பந்துகளில் 45 ரன்களும், சூரியகுமார் 25 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா 12.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்தது.
இந்தநிலையில், ஹாமில்டனில் மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தியா - நியூசிலாந்து 2-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யவதாக அறிவிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி வரும் 30-வது தேதி நடைபெற உள்ளது.
Advertisment
Advertisements
முன்னதாக, 12.5 ஓவரில் மழையால் போட்டி தடைபட்ட போது, ஊழியர்கள் மைதானத்தை தார்பாய் கொண்டு மூட விரைந்தனர். அப்போது நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மைதான ஊழியர்களுக்கு உதவினார். இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) அணி ட்விட்டரில் பகிர அதை ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சஞ்சு சாம்சன் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சஞ்சு சாம்சனுக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது குறித்து அவரது ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், சாம்சனின் இந்த செயல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.