IND VS NZ 3rd T20 Match 2022 Match highlights in tamil
IND VS NZ 3rd T20 Match 2022 Match highlights in tamil: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 18 ஆம் தேதி நடந்த முதலாவது டி20 ஆட்டம் தொடர் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஞாயிற்று கிழமை) 2வது டி20 போட்டி நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி நியூசிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Advertisment
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க்கில் நடைபெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கும் நேப்பியரில் தொடர் மழை பெய்தது. மழை நின்றுவிட்ட நிலையில், ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்; இந்தியா பவுலிங்...
இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா பவுலிங் செய்தது.
ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, இஷ் சோதி, டிம் சவுத்தி (கேப்டன்), லாக்கி பெர்குசன்.
நியூசிலாந்து பேட்டிங்
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பின் ஆலென் - டெவான் கான்வே ஜோடி களமிறங்கினர். இதில் ஆலென் 3 ரன்னிலும், அடுத்து வந்த சாம்ப்மேன் 12 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதன்பிறகு 3வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் கான்வேயுடன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளை துரத்தி 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபுறம் நிதானமாக ஆடிய கான்வே அரைசதம் கடந்த கான்வே 59 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 161 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய இஷான் கிஷான் 10 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். சூர்யகுமாருடன் ஜோடி சேர வந்த ஷ்ரேயாஸ் ஐயர் டக்-அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடித்து ஆடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா 30 ரன்னுடனும், தீபக் ஹூடா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அப்போது ஆட்டத்தில் மழை குறுக்கீடு செய்த நிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடரை வென்ற இந்தியா
இந்திய அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் முறைப்படி, இந்திய அணி 9 ஓவர்களுக்குப் பிறகு 75 ரன்கள் சேர்த்து இருந்தது. எனவே, ஆட்டம் மீண்டும் தொடங்கவில்லை என்றால், போட்டி டையில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போட்டி டை என்று அறிவிக்கப்பட்டது. இதனால், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்று அசத்தியுள்ளது. தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றார்.