Advertisment

IND vs NZ 3rd T20: 66 ரன்னில் சுருண்ட நியூசி,.; அபார வெற்றியை ருசித்த இந்தியா தொடரைக் கைப்பற்றி அசத்தல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs New zealand , 3rd T20 Match 2023 , 3rd T20 match  Live Cricket Score  

IND vs NZ 3rd T20 Match 2023 Live Cricket Score Streaming Online

IND vs NZ 3rd T20 Match 2023 Highlights in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் பறிகொடுத்தது. தொடர்ந்து அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. இதில், ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. இதனால் தொடர் 1 -1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

Advertisment

இந்நிலையில், தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நேற்று இரவு (புதன் கிழமை - பிப்ரவரி 1 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனால், நியூசிலாந்து அணி பவுலிங் செய்தது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷுப்மான் கில் – இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி கில்லுடன் ஜோடி அமைத்தார். இவருவரும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 44 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த அதிரடி வீரர் சூரியகுமார் 13 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 24 ரன்னில் அவுட் ஆனார். இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிறகு கேப்டன் பாண்டியவுடன் இணைந்து தனது அதிரடியான ஆட்டத்தை விளையாடிய அவர் ஒரு பவுண்டரியை விரட்டி 54 பந்துகளில் தனது முதலாவது டி20 சதத்தை பதிவு செய்தார். 17 பந்துகளில் ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகளை ஓட விட்ட கேப்டன் பாண்டியா 30 ரன்னில் அவுட் ஆனார். 63 பந்துகளை எதிர்கொண்ட தொடக்க வீரர் கில் 12 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் என ரன் மழை பொழிந்து 126 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையும் படியுங்கள்: 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் கில்: மற்ற 4 பேர் யார், யார்?

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 234 ரன்கள் குவித்து, நியூசிலாந்துக்கு 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல், பிளேயர் டிக்னர், இஷ் சோதி மற்றும் டேரில் மிட்செல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்ந்து 235 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் டாப் ஆடர் வீரர்களான ஃபின் ஆலன் (3), டெவோன் கான்வே (1), மார்க் சாப்மேன் (0), க்ளென் பிலிப்ஸ் (2) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிறகு வந்த வீரர்களில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 35 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட்டுக்கு பிறகு வந்த வீரர்களும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காமல் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

இறுதியில், நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறித்து கொடுத்தது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணி தரப்பில் மிரட்டல் பந்துவீச்சு தாக்குதல் தொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் சிவம் மாவி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தின் நாயகனாக ஷுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக கேப்டன் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 9 ஆம் தேதி நாக்பூரில் நடக்கிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil



  • 21:57 (IST) 01 Feb 2023
    இந்தியா மிரட்டல் பந்துவீச்சு; அடுத்தடுத்த விக்கெட் இழப்பு, தோல்வியின் பிடியில் நியூசிலாந்து

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 235 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி துரத்தி வருகிறது. தற்போது நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியாவின் மிரட்டலான பந்துவீச்சுக்கு எதிராக நியூசிலாந்து வீரர்கள் தடுமாறி வருகிறார்கள்.



  • 21:41 (IST) 01 Feb 2023
    பவர் பிளே முடிவில் நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 235 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி துரத்தி வருகிறது. தற்போது நியூசிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.



  • 21:17 (IST) 01 Feb 2023
    பந்துவீச்சில் மிரட்டி எடுக்கும் இந்தியா... 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறும் நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 235 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி துரத்தி வருகிறது. அந்த அணியின் டாப் ஆடர் வீரர்களான ஃபின் ஆலன் (3), டெவோன் கான்வே (1), மார்க் சாப்மேன் (0), க்ளென் பிலிப்ஸ் (2) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணியில் மிரட்டல் பந்துவீச்சு தாக்குதல் தொடுத்த அர்ஷ்தீப் சிங், கேப்டன் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    தற்போது நியூசிலாந்து அணி 3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்துள்ளது.



  • 20:45 (IST) 01 Feb 2023
    கில் சதம்; ரன் மழை பொழிந்த இந்தியா... நியூசிலாந்துக்கு 235 ரன்கள் இலக்கு!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை நொறுக்கிய அள்ளி ரன் மழை பொழிந்தனர். குறிப்பாக தொடக்க வீரர் கில் சதம் விளாசி 126 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்களை குவித்துள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • 20:31 (IST) 01 Feb 2023
    சதம் விளாசி மிரட்டிய கில்!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது. மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தொடக்க வீரர் கில் சதம் விளாசி மிரட்டியுள்ளார். அவர் 54 பந்துகளில் சதம் அடித்தார்.



  • 20:18 (IST) 01 Feb 2023
    கில் அரைசதம் விளாசல்... வலுவான ரன்களை குவிக்கும் இந்தியா!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது. தற்போது 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்களை சேர்த்துள்ளது.

    அரைசதம் விளாசியுள்ள தொடக்க வீரர் கில் 80 ரன்கள் எடுத்துள்ளார்.



  • 20:01 (IST) 01 Feb 2023
    சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் அவுட்

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போ்டியில் முதலில் பேட் செய்து வரும்இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.



  • 19:57 (IST) 01 Feb 2023
    அரைசதம் கடந்த சுப்மான் கில்

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போ்டியில் முதலில் பேட் செய்து வரும்இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்துள்ளது. சுப்மான் கில், 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்துள்ளார்.



  • 19:40 (IST) 01 Feb 2023
    அரைசதத்தை மிஸ் செய்த ராகுல் திரிபாதி

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போ்டியில் முதலில் பேட் செய்து வரும்இந்திய அணி ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



  • 19:30 (IST) 01 Feb 2023
    முதல் 6 ஓவர்களில் இந்தியா 58/1

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போ்டியில் முதலில் பேட் செய்து வரும்இந்திய அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளனர். இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தாலும், கில் 34 ரன்களுடனும், திரிபாதி 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • 18:37 (IST) 01 Feb 2023
    இரு அணிகளில் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்!

    நியூசிலாந்து:

    ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், பிளேயர் டிக்னர்



  • 18:37 (IST) 01 Feb 2023
    இரு அணிகளில் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்!

    இந்தியா

    ஷுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்



  • 18:34 (IST) 01 Feb 2023
    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்: நியூசிலாந்து பவுலிங்!

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனால் நியூசிலாந்து அணி பந்துவீசுகிறது.



  • 18:20 (IST) 01 Feb 2023
    இரு அணி உத்தேச லெவன்!

    நியூசிலாந்து

    ஃபின் ஆலன், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்



  • 18:19 (IST) 01 Feb 2023
    இரு அணி உத்தேச லெவன்!

    இந்தியா:

    ஷுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்/உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்



  • 18:08 (IST) 01 Feb 2023
    வரலாறு படைக்குமா நியூசிலாந்து?

    2012-ம் ஆண்டு இந்திய மண்ணில் டி20 தொடரை வென்ற நியூசிலாந்து அணி அதன் பிறகு இங்கு எந்தவித போட்டி தொடரையும் கைப்பற்றியது கிடையாது. இதனால், தொடரை வென்று தங்களது நீண்ட கால ஏக்கத்தை தணிக்க நியூசிலாந்து அணி முயற்சி செய்யும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.



  • 17:41 (IST) 01 Feb 2023
    அகமதாபாத் ஸ்டேடியம்; சூரியகுமார் ஆவல்!

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்திற்கு முன்னதாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் துணை கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசுகையில், "2021-ம் ஆண்டு இதே மைதானத்தில் தான் எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். இங்கு எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு. ஆனால் தற்போதைய நிலைமை முற்றிலும் வேறு. மீண்டும் இங்கு விளையாட இருப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. அழகான ஸ்டேடியம், வியப்பூட்டும் ரசிகர்கள் கூட்டம் முன்பு விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்" என்று கூறினார்.



  • 17:19 (IST) 01 Feb 2023
    இந்தியாவுக்கு முக்கியமான ஆட்டம்!

    நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் சறுக்கலை சந்தித்தால் சொந்த மண்ணில் இந்தியா 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தொடரை இழக்கும். மேலும், டி20 தொடர் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தையும் பறிகொடுக்கும். எனவே, இந்திய அணி தொடரை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லா வகையிலும் முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.



  • 17:05 (IST) 01 Feb 2023
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.



Cricket Sports Indian Cricket T20 Hardik Pandya India Vs New Zealand Live Updates Live Cricket Score Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment