News about Shikhar Dhawan - Sanju Samson in tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டிய தலைமையிலான இந்திய டி20 அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை மூத்த வீரர் ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.
இந்நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக கேப்டன் தவான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆடும் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து விவரித்தார்
“பெரும்பாலும் ஒவ்வொரு வீரரும் கடந்த தொடரில் சிறப்பாகச் செயல்பட்டாலும், ஆடும் லெவனில் இல்லாத இந்தக் கட்டத்தைக் கடந்து செல்கிறார்கள். தொடர்பு முக்கியமானது, பயிற்சியாளர்களும் கேப்டன்களும் வீரர்களுடன் பேசுகிறார்கள். சாம்சன் போன்ற வீரர்களுக்கு அவர்கள் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதில் தெளிவு உள்ளது. அடிப்படையில், இது அணியின் நன்மை மற்றும் அணி சேர்க்கைகள் காரணமாகும், ”என்று அவர் கூறினார்.
சஞ்சுவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?
இந்திய விக்கெட் கீப்பர் வீரரான சஞ்சு சாம்சன் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமாடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் (ஒரு ஆட்டம் மழை காரணமாக நடக்கவில்லை) வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய பண்ட் சொதப்பிய போதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால், சஞ்சு பெஞ்சில் அமரும் நிலை தான் ஏற்பட்டது.
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியாவுக்கு ஒருநாள் தொடரில் இருந்து தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்தில் சஞ்சுவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று ரசிர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
சஞ்சு சாம்சன், 2022 ஆம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஒன்பது போட்டிகளில் விளையாடி இருந்த அவரின் பேட்டிங் சராசரி100-க்கு மேல் உள்ளது. இந்த ஆட்டங்களில் அவர் பெரும்பாலும் 5 மற்றும் 6 வது இடங்களில் பேட்டிங் செய்து, தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், ஃபினிஷராகவும் தன்னை மேம்படுத்தி இருந்தார். தற்போது பாண்டியா இல்லாத நிலையில், அந்த பொறுப்பு அவருக்கு மீண்டும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.