/indian-express-tamil/media/media_files/2025/03/02/dMq6JpyCjdfZRdqh9SzN.jpg)
India vs New Zealand Champions Trophy 2025 Live Score
IND vs NZ Champions Trophy 2025 Live Score: துபாயில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs New Zealand LIVE Cricket Score, Champions Trophy 2025: Varun Chakravarthy helps IND win by 44 runs
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இவர்களில் ஷுப்மன் கில் 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை மேட் ஹென்றி வீழ்த்தினார்.
மறுபுறம், ரோகித் ஷர்மாவும் 15 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, விராட் கோலி களமிறங்கினார். அவரிடமிருந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், விராட் கோலியும் 11 ரன்களில் மேட் ஹென்றியிடம் தனது விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து, ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேல் களமிறங்கினர்.
இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினர். அந்த வகையில், 61 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசிய அக்சர் பட்டேல், ரச்சின் ரவிந்திராவிடம் தனது விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து போராடிய ஷ்ரேயஸ் ஐயர், 98 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். எனினும், வில் ஓ ரோர்க் பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர், அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் முறையே 45 ரன்கள் மற்றும் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர், களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். குறிப்பாக, ஜடேஜா 16 ரன்களும், முகமது ஷமி 5 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் இருந்து அபாரமாக பந்து வீசிய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கைல் ஜேமிசன், வில் ஓ ஓர்ர்கே, மிட்செல் சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவிந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அதன்பேரில், வில் யங் மற்றும் ரச்சின் ரவிந்திரா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் ரச்சின் ரவிந்திரா 6 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். அடுத்ததாக கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.
இதனிடையே, வில் யங்கும் 22 ரன்கள் எடுத்த நிலையில், வருண் சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஒற்றை ஆளாக போராடிய கேன் வில்லியம்சன் அணியின் ரன்களை உயர்த்தும் பணியில் ஈடுபட்டார். எனினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குறிப்பாக, மிட்செல் 17 ரன்களும், டாம் லதம் 14 ரன்களும், க்ளென் ஃபிளிப்ஸ் 12 ரன்களும், பிரேஸ்வெல் 2 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 28 ரன்களும், மேட் ஹென்றி 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் அணியை வெற்றியடையச் செய்ய கடுமையாக போராடிய கேன் வில்லியம்ஸ் 120 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில், அக்சர் பட்டேலிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் காரணமாக 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 42 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், குல்தீப் யாதவ் 2 விகெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் துபாயில் நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.
இரு அணி விளையாடும் வீரர்களின் விபரம்
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே
உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற போட்டிகளில் இரு அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் நியூசிலாந்து 10 முறையும், இந்தியா 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் உலகளாவிய போட்டிகளில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா எப்போதும் மோசமான சாதனையைப் பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் நடந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவை நியூசிலாந்து தோற்கடித்துள்ளது, அதேநேரம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஆனால் இந்த இரு அணிகளும் கடைசியாக 50 ஓவர் ஐ.சி.சி போட்டியில் சந்தித்தபோது, 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் ரோஹித் அண்ட் கோ நியூசிலாந்து அணியை தோற்கடித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.