scorecardresearch

மும்பை டெஸ்ட்: இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரை வென்றது!

India vs New Zealand 2nd Test Updates Tamil News: நியூசிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

IND VS NZ mumbai test Tamil News: India vs New Zealand 2nd Test LIVE Score and updates tamil

IND VS NZ 2nd Test Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து போராடி ‘டிரா’ செய்தது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வான்கடே மைதானம் எப்படி?

மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கிறது. புற்களும் ஓரளவு இருப்பதால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் என்றும், பவுன்சும் சற்று அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 25 டெஸ்டுகளில் விளையாடி 11-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. இதேபோல் நியூசிலாந்து அணி இங்கு 2 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (1988-ம் ஆண்டில் 136 ரன் வித்தியாசத்தில் வெற்றி), மற்றொன்றில் தோல்வியும் (1976-ம் ஆண்டில் 162 ரன் வித்தியாசத்தில் தோல்வி) சந்தித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 631 ரன்கள் குவித்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

சதம் விளாசுவார கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தை ருசித்து 2 ஆண்டுகள் கழிந்துவிட்டன. எனவே, இன்றைய ஆட்டத்தில் சதம் ஏக்கத்தை அவர் தணிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இஷாந்த் – ரஹானே – ஜடேஜா நீக்கம்

இந்த போட்டியில் இருந்து இஷாந்த் சர்மா, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இஷாந்த் ஷர்மா – இடது சுண்டு விரல் காயம்.
ரவீந்திர ஜடேஜா – வலது முழங்கையில் காயம்.
அஜிங்க்யா ரஹானே – இடது தொடையில் வலி

கேப்டன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இடது முழங்கை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்கவில்லை என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதில் தொடக்க வீரர் டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார்.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

நியூசிலாந்து அணி எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), வில் யங், டேரில் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, வில்லியம் சோமர்வில்லே, அஜாஸ் படேல்</p>

இந்தியா: மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

முதல் நாள் ஆட்டம் – இந்தியா பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து 44 ரன்கள் சேர்த்த சுப்மன் கில் அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் ராஸ் டெய்லர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, அஜாஸ் பட்டேல் வீசிய 29.2 ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் கோலி அதே ஓவரில் கடைசி பந்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். கோலி எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனாது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மயங்க் அகர்வால் சதம்

தேநீர் இடைவேளையின் போது மயங்க் அகர்வால் 52 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதில் கடைசி செசனில் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். எனினும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 196 பந்துகளில் 3 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் தனது 4வது சதத்தை மும்பை மண்ணில் பதிவு செய்தார்.

இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் 102 ரன்களுடனும், சாஹா 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் 4 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

2ம் நாள் ஆட்டம் – இந்தியா பேட்டிங்

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இன்று 2ம் நாள் ஆட்ட நேரத்தை தொடங்கியது. களத்தில் 20 ரன்களுடன் இருந்த சாஹா அவுட் ஆனாலும், தொடர்ந்து சிறப்பாக விளையாடி மயங்க் அகர்வால் 311 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்ஸர் என 150 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களில் அக்சர் படேல் மட்டும் நிதானம் காட்டி அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். இதனால் இந்திய அணி 109.5 ஓவர்களில் 325- ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அஜாஸ் பட்டேல் புதிய சாதனை

நியூசிலாந்து தரப்பில் சுழலில் மாயாஜாலம் செய்த சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் 10 விக்கெட்டையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.

அஜாஸ் படேல் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய போது தனது 3-வது ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், இந்திய அணிக்கெதிராக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். அதோடு, சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்

இந்த சாதனையை படைத்த முதல் வீரர் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் (10/53) ஆவார். அவர் 1956ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தினார்.

2வது வீரர் இந்திய அணியின் சுழல் மன்னர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே (10/74) ஆவார். இவர் கடந்த 1999 ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்த சாதனை நிகழ்த்தினார். தற்போது இந்த சாதனை நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் (10/119) இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் நிகழ்த்தி இருக்கிறார்.

62 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து…

தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்காத அந்த அணி 62 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மிகத்துல்லியமாக பந்துகளை வீசிய நெருக்கடி கொடுத்த இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

2வது இன்னிங்ஸ் – இந்தியா பேட்டிங்

இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 263 ரன்கள் முன்னிலையுடன் இருந்தாலும் நியூசிலாந்துக்கு பால்-ஆன் கொடுக்காமல் தற்போது 2-வது இன்னிங்ஸை தொடங்கி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் மயங் அகர்வால் – புஜாரா ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்துள்ளனர். இதனால் இந்திய அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 332 ரன்கள் சேர்த்துள்ளது.

மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் (75 பந்துகள் – 6 பவுண்டரிகள்), சேதேஷ்வர் புஜாரா 29 ரன்களுடனும் (51 பந்துகள் – 3 பவுண்டரி, 1சிக்ஸர்) களத்தில் உள்ளனர்.

3ம் நாள் ஆட்டம் – மயங்க் அகர்வால் அரைசதம்

தொடர்ந்து 3ம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் மயங்க் அகர்வால் – புஜாரா ஜோடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது. இதில் 108 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்ஸர் என அரைசதம் கடந்த மயங்க் அகர்வால் 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் தட்டிக்கொடுத்து ஆடி வந்த புஜாரா 97 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்டரி என 47 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இதன்பிறகு களமிறங்கிய சுப்மன் கில் – கேப்டன் கோலி ஜோடி நிதானமாக மட்டையை சுழற்றி வருகிறது. மூன்றாம் நாள் உணவு இடைவேளை முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக வலுவான ரன்களை குவித்த இந்திய அணியில் சுப்மன் கில் 47 ரன்னுடனும், கேப்டன் கோலி 36 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு ஆடிய இந்திய வீரர்களில் அதிகபட்சமாக அக்சர் படேல் 41 ரன்கள் சேர்த்தார்(26 பந்துகளில் 4 சிக்ஸர் 3 பவுண்டரி).

இந்திய அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் அடித்து இருந்த போது 2வது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. எனவே நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் கொண்ட இமாலய இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் கொண்ட இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்த நிலையில், 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வந்த நியூசிலாந்து அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியில் டேரில் மிட்செல் அதிகபட்சமாக 60 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 400 ரன்கள் தேவை. தற்போது வரை இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.

இன்று (திங்கள்கிழமை) நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே நியூசிலாந்து அணி மலமலவென அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களில் சுருண்டது.

இதன்மூலம், இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனும் கணக்கில் கைப்பற்றியது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் தரப்பில், அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அக்சர் பட்டேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி உள்ளது.

New Zealand in India, 2 Test Series, 2021Wankhede Stadium, Mumbai   21 March 2023

India 325(109.5)& 276/7dec

vs

New Zealand   62(28.1)& 167(56.3)

Match Ended ( Day 4 – 2nd Test ) India beat New Zealand by 372 runs

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs nz mumbai test tamil news india vs new zealand 2nd test live score and updates tamil