ICC World Cup 2019, India Vs New Zealand Score Updates: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூலை.10) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றஅரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. நேற்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து, மீண்டும் அதே இடத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆனால், நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், இந்திய அணி 49.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களில் சுருண்டது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ட்வீட்டில், “இறுதிப் போட்டிக்கு முன்னேற போதுமான பேட்டிங்கை இந்தியா வெளிப்படுத்தவில்லை. ஜடேஜாவும், தோனியும் கடுமையாக தாக்குப்பிடித்து முயற்சி செய்தார்கள். மீண்டும் இந்தியாவை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்கள். ஆனால், இந்தியா வெளியேற, நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இது ஒரு பெரிய அப்செட் தான்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு அதிருப்தியான முடிவு, ஆனால், கடைசி வரை இந்தியா போராடிய போராட்ட குணம் பார்க்க சிறப்பாக இருந்தது. இத்தொடர் முழுவதும் இந்தியா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக பங்காற்றியதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். வாழ்க்கையில், வெற்றி, தோல்வியும் ஒரு அங்கமே. எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்பட இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, “நாங்கள் முதல் பகுதியில் மிக மிக நல்ல நிலையில் இருந்தோம். நியூசிலாந்தை மிக குறைவான ஸ்கோரில் கட்டுப்படுத்தியதாகவே நினைத்தோம். எட்டக்கூடிய இலக்கு என்றே நினைத்தோம். ஆனால், கையில் பந்துடன் வந்த நியூசிலாந்து வீரர்கள் அனைத்தையும் மாற்றிவிட்டனர். ஜடேஜாவின் ஆட்டம் மிக அருமையாக இருந்தது. உச்சபட்ச நேர்மறை எண்ணத்தில் இருந்தது. இந்த வெற்றிக்கு நியூசிலாந்து தகுதியான அணி. நாக் அவுட் சுற்று என்று வந்துவிட்டால், எங்களை விட நியூசிலாந்தே அதிக தைரியத்துடன் விளையாடுகிறது. திரளாக வந்து எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.
49.3வது ஓவரில், இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது.
புவனேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமல், பெர்கியூசன் பந்தில் போல்டானார்.
72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த தோனி, கப்திலின் அபார த்ரோவில் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இந்தியா உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.
மிகக் கடுமையாக போராடிய ரவீந்திர ஜடேஜா, 59 பந்துகளில் 77 ரன்களில் போல்ட் ஓவரில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஜடேஜாவும் அவுட்…
47 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு தேவை 18 பந்துகளில் 37 ரன்கள். ஜெயித்தால் இறுதிப் போட்டி… தோற்றால் வெளியேற்றம்.
எகிறும் பிரஷர்!!
ஜடேஜா – தோனி இணை 97 பந்துகளுக்கு 100 ரன்களை எடுத்துள்ளது. 46 ஓவர்களில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள்….
இந்திய அணி வெற்றிப் பெற 30 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க வேண்டும். எப்போதோ தோற்றிருக்க வேண்டிய ஆட்டத்தை ஜடேஜாவும், தோனியும் இணைந்து இறுதிக் கட்டம் வரை கொண்டு வந்துவிட்டனர். ரசிகர்களின் பிபி எகிறுகிறது.
ஜடேஜாவின் நம்ப முடியாத அரை சதத்திற்கு பிறகு, மண்ணுக்குள் புதைந்து போன இந்தியாவின் நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டுள்ளது. அசாத்திய முடிவை சாத்தியமாக்கும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. ஆனால், அது எடுபடுமா???
குரூப்புல டூப்பு என்கிற ரீதியில் சஞ்சய் மஞ்சரேக்கரால் விமர்சிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா, அரையிறுதிப் போட்டியில் 39 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார்.
அவரு குரூப்புல டூப் இல்ல… குரூப்புல டாப்பு
இந்திய அணி 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எட்டியுள்ளது. ரவீந்திர ஜடேஜா தனி ஆளாக நியூசிலாந்திற்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. தன்னால் முடிந்த அளவு பவுண்டரிகளையும் அடிக்கிறார்.. சிக்ஸர்களையும் அடிக்கிறார்.
இந்திய அணி 38 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. இனி ஓவருக்கு 9 ரன்கள் என்ற வீதத்தில் இந்திய அணி அடிக்க வேண்டும்.
அடப்போங்கய்யா… என்று நீங்கள் சலித்துக் கொள்வது எங்களுக்கு கணீரென்று கேட்கிறது.
நாம் தான் தோனி பற்றி பேசாமல் இருந்தோம். கடைசியில், நம்மையும் தோனி ஓய்வு குறித்து பேச வைத்துவிட்டார்கள். ஒருவேளை, உலகக் கோப்பையில் இருந்து தோனி ஓய்வு பெறும் எண்ணத்தில் இருந்தால், இப்போட்டியே அவரது கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம்.
விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்கும் சூழலில், ஜடேஜாவிடம் இருந்து லாங்-ஆன்-ல் ஒரு பலமான சிக்ஸ். நீண்ட நேரம் கழித்து இந்திய ரசிகர்களிடம் இருந்து ஒரு நல்ல கூச்சல்… இந்திய அணி 33 ஓவர்களில் 106-6.
இனி வயசுக்கு வந்தா என்ன… வராட்டி என்ன!!?
பொறுத்து பொறுத்துப் பார்த்த ஹர்திக் பாண்ட்யா, சான்ட்னர் ஓவரில் சிக்ஸ் அடிக்க முயல, டாப் எட்ஜ் ஆகி, 32 ரன்களில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்தியா தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது. இறுதிப் போட்டி வாய்ப்பையும் இழந்தது.
இந்திய அணி 29 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினாலும், நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
உலகக் கோப்பை தொடரில், சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, லீக் சுற்றில் இங்கிலாந்திடம் மற்றும் தோற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. ஆனால், அரையிறுதியில் நான்காம் இடம் பிடித்த நியூசிலாந்திடம் இந்திய அணி இவ்வளவு பரிதாபமாக விளையாடும் என யாரும் நினைக்கவில்லை. சொல்லப்போனால், அதீத நம்பிக்கையில் இந்தியா வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற ரீதியிலேயே அனைவரின் கருத்தும் இருந்தது. ஆனால்,,, இன்று நாம் கண்டுகொண்டிருக்கும் காட்சி வேறு…
ரிஷப் பண்ட் கதை முடிந்தது. சான்ட்னர் ஓவரில் ரிஷப் பண்ட் 32 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, இந்தியா தனது ஐந்தாவது விக்கெட்டை பறிகொடுத்தது. தோல்வியின் விளிம்பில் இந்திய அணி….
இந்தியாவுக்கு வெற்றி உறுதி!. நிச்சயமாக… முதல் நான்கு விக்கெட்டுகளை இந்தியா இழந்த பிறகும், 40வது ஓவரில் தோனி களமிறங்குவது போன்ற சூழல் ஏற்பட்டது எனில், இந்தியா நிச்சயம் இப்போட்டியை வென்றுவிடும். ஆனால், அதற்கு ரிஷப் பண்ட் – பாண்ட்யாவின் பார்ட்னர்ஷிப் மிக மிக முக்கியம்.
ரிஷப் பண்ட்க்கு கைக்கு வந்த கேட்சை நியூசிலாந்து தவற விட்டிருக்கிறது. அதேபோன்று, ஹர்திக் பாண்ட்யா தூக்கி அடித்த பந்தும், ஆளில்லா இடத்தில் லேண்ட் ஆனதால், விக்கெட்டில் இருந்து தப்பித்தார். இந்தியா, எந்நேரமும் ஆல் அவுட் ஆகுவது போன்றே விளையாடி வருகிறது.
மேலும் படிக்க – விராட் கோலி மோசமான சாதனை: உலகக் கோப்பை ‘நாக் அவுட்’ போட்டிகளில் தொடர்ந்து திணறல்
உலகத்தில் இன்றைய தேதியில், மிகவும் சிக்கலான கேள்வி இது தான். 10 ஓவர்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்டது. கையில் இனி மீதம் இருப்பது நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே, ஜடேஜாவையும் சேர்த்து. இலக்கு கிட்டத்தட்ட 200 ரன்கள் இருக்கிறது. இப்போது களத்தில் நிற்பது ரிஷப் பண்ட் – பாண்ட்யா ஜோடி. இந்த இணை அடுத்த 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தால் வெற்றி குறித்து யோசிக்கலாம். அப்போதும் யோசிக்கலாம் அவ்வளவே.
இந்தியாவுக்கு இப்போது இருக்கும் மாபெரும் ஆறுதல், இன்னும் தோனி களமிறங்கவில்லை…
மேட் ஹென்றியின் மூன்றாவது விக்கெட்டாக தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் வெளியேற்றப்பட்டார். இந்திய அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது.
5 ரன்களுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருப்பது என்பது வேற லெவல் கிரிக்கெட் எனலாம். பிட்ச் பந்துவீச்சிற்கு ஒத்துழைத்ததால், நியூஸி., பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்களா, அல்லது இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியா தற்போது பரிதாபமான நிலையில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
ரோஹித் அவுட்டானதைத் தொடர்ந்து, விராட் கோலி 1 ரன்னில் போல்ட் ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, மேட் ஹென்றியின் நான்காவது ஓவரில் 1 ரன்னில் லோகேஷ் ராகுலும் ஸ்லிப்பில் கேட்ச் ஆக, இந்தியா மூன்றாவது விக்கெட்டை இழந்தது.
மேட் ஹென்றியின் அபாரமான லென்த் பந்தில், எட்ஜ் ஆன ரோஹித் ஷர்மா, ஒரு ரன்னில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணிக்கு இது மாபெரும் பின்னடைவாக அமைந்துள்ளது எனலாம்.
நியூசிலாந்து பேட்டிங் செய்த பிறகு, வெறும் 5 நிமிட இடைவெளியில் இந்திய அணி களமிறங்கி இருக்கிறது. ரோஹித் – ராகுல் ஓப்பனிங்கை துவக்க, போல்ட் முதல் ஓவரை வீசி வருகிறார்.
50 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஆட்டம் தொடங்கிய போது, மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து நியூசிலாந்து இழந்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 74 ரன்களும், கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ் குமார் 10 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ராஸ் டெய்லர் அவுட்டான பிறகு, புவனேஷின் 49வது ஓவரில் லாதம் 10 ரன்களிலும், மேட் ஹென்றி 1 ரன்னிலும் அவுட்டாக, நியூசிலாந்து தனது எட்டாவது விக்கெட்டை இழந்தது.
இதுக்கு தான் ஜடேஜா அணிக்கு தேவை என்பது. பும்ரா ஓவரில் ராஸ் டெய்லர் சிங்கிள் தட்டிவிட்டு ஓட, டீப் ஸ்கொயர் லெக்கில் இருந்து ஜடேஜா வீசிய துல்லியமான த்ரோவில், 74 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
நேற்று அதிக நேரம் மழை பெய்திருப்பதால், பிட்ச் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறது என்பது இனி தான் தெரிய வரும். எப்படியும் 250 ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதில், நியூசிலாந்து தீவிரமாக உள்ளது. டெத் ஓவர்களை பும்ராவும், புவனேஷும் வீசுவதால், 250 என்பது உண்மையில் நியூசிலாந்துக்கு கடினமான இலக்காகும்.
இது டெஸ்ட் மேட்ச் இல்லீங்கோ… இந்தியா – நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியின் இரண்டாம் பாதி இன்று தொடங்கியது. 46.1வது ஓவரில் இருந்து நியூசிலாந்து தனது ஆட்டத்தை தொடங்கியது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடக்கும் மான்செஸ்டர் மைதானத்தில் நல்ல வானிலை நிலவி வருகிறது. அங்கு பெரும்பாலும் மழை பெய்ய வாய்ப்பில்லை. மான்செஸ்டரில் அதிகாலையில் இருந்து வெயில் அடித்து வருகிறது. பெரிய அளவில் வானத்தில் மேகமே காணப்படவில்லை. அதேபோல் பெரிய அளவில் வெயிலும் சுட்டெரிக்கவில்லை. மிதமான, ஈரப்பதமான வானிலையே அங்கு நிலவி வருகிறது. தண்ணீருடன் காணப்பட்ட மைதானம் இன்று நன்றாக உலர்ந்து உள்ளது. ஓல்ட் டிரபோர்ட் மைதானம் விரைவாக தண்ணீரை வெளியேற்றும் வசதியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று அதிகாலையே ஓல்ட் டிரபோர்ட் மைதானம் நன்றாக உலர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பஇகுதியில் மழை இல்லை என்பதால், ஓல்ட் டிரபோர்ட் மைதானம் மிகவும் காய்ந்து இருக்கிறது . இது இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். நியூசிலாந்து அணி நிர்வாகம் சரியாக வானிலையை கணித்து இருந்தால் கண்டிப்பாக நேற்று பேட்டிங் எடுத்து இருக்க மாட்டார்கள். ஒருவேளை நேற்று இந்தியா முதலில் பேட்டிங் செய்திருந்து, இன்று நியுசிலாந்து பேட்டிங் செய்து இருந்தால் போட்டி வேறு மாதிரி சென்றிருக்க கூட வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டுவிட்டது. நியூசிலாந்து செய்த தவறு இந்திய அணிக்கு உதவி காரணமாக மாறி உள்ளது. இந்திய கிட்டதட்ட இந்த போட்டியில் இப்போதே வெற்றிக்கு பக்கம் வந்துவிட்டது. இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடினால் போதும் வெற்றி நமது வசம் தான்.
மழை காரணமாக தடைபட்ட இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி இன்று ( 10ம் தேதி) நடைபெற உள்ளது. பார்வையாளர்கள் நேற்று வாங்கிய டிக்கெட்டை இன்று காண்பித்து மைதானத்திற்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மைதானத்தில் இன்று டிக்கெட் விற்பனை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வந்த ரசிகர்களே இன்று வருவர். புதிதாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டி நேற்று ( 9ம் தேதி) ஓல்டு டிரபோர்ட் மைதானத்தில் நடந்தது. இவ்விரு அணிகளை விட மழை அபாரமாக விளையாடியதால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த போட்டி, இன்று (10ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று போட்டி முழுமையாக நடைபெறும் என்றும், மழைக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் இந்திய வீரர்கள் அபாரமாக பந்து வீசினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்த நிலையில் மழை குறுக்கிட, ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று (ஜூலை 10) போட்டி தொடர்ந்து நடக்க உள்ளது.
மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி… மழை குறைந்திருக்கிறது… மேகமும் சற்று கலைந்து பளீர் வானத்தை நம்மால் காண முடிகிறது.
இருக்கு ஆனா இல்லை… இதே மோடில் தான் நாமும் இருக்கிறோம், ரசிகர்களும் இருக்கிறார்கள், வீரர்களும் இருக்கிறார்கள், அம்பயர்களும் இருக்கிறார்கள். மழை இப்போதும் பெய்து கொண்டிருக்கிறது. ஒருவேளை அதன்பிறகு மழை விட்டு, போட்டி தொடங்க வாய்ப்புள்ளது எனில், இந்திய நேரப்படி நள்ளிரவில் 20 ஓவர் போட்டியாக நடக்க வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை இன்று மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாவிடில், நாளை(ஜூலை.10) ஆட்டம் மீண்டும் நடைபெறும். அதாவது, இன்று ஆட்டம் எந்த இடத்தில் முடிந்ததோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் நாளை தொடரும். ஆனால், மழையின் தீவிரம் குறையவில்லை.
ஒருவேளை இதற்கு பிறகு, நியூசிலாந்து பேட்டிங் செய்யவே இல்லை எனில், இந்தியாவுக்கு DLS விதிப்படி 46 ஓவர்களில் 237 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும். 20 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டால், இந்தியாவுக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும்
மழை மீண்டும் அதிகமாக பெய்யத் தொடங்கி இருக்கிறது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி தாண்டியும் மழை நீடிக்கிறது எனில், அதன் பிறகு போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும். அப்படியெனில், இந்திய நேரப்படி இரவு 8.30 மணி தாண்டியும் போட்டி நடைபெறவில்லை எனில், இந்தியாவுக்கான ஓவர்கள் DLS விதிப்படி குறைக்கப்படும்.
மீண்டும் நமக்கு கிடைத்திருக்கும் பாஸிட்டிவான தகவல் மழை குறைந்து கொண்டே இருக்கிறது என்பதே. வானிலை க்ளீயர் ஆகவில்லை என்றாலும் மழையின் அளவு குறைந்துவிட்டது. அடுத்த அறிவிப்புக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்…
மைதானத்தில் கனமழை பெய்யவில்லை என்பது முதல் தகவல். இருப்பினும், பிட்ச் முழுவதும் கவர் செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் டிரைனேஜ் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. மிக விரைவில் சுத்தம் செய்துவிடுவார்கள்.
ஸோ, போட்டியை மீண்டும் நாம் எதிர்பார்க்கலாம்.
46.1 வது ஓவரின் மழை லேசாக குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விக்கெட்டை பாதுகாக்க துரிதமான நடவடிக்கைகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புவனேஷ் குமாரின் ஸ்லோ பந்தில், கோலின் டி கிராண்ட்ஹோம் 16 ரன்களில், கீப்பர் கேட்ச் ஆனார். நியூசிலாந்து தனது 5வது விக்கெட்டை இழந்தது. ஆனாலும், ராஸ் டெய்லர் களத்தில் நிற்பதை நமது பவுலர்கள் மறக்காமல் இல்லை.
சாஹல் ஓவரில் டீப் மிட் விக்கெட்டில் செம சிக்ஸ் ஒன்றை ராஸ் டெய்லர் விளாச, தனது 50வது ஒருநாள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதோடுமட்டுமில்லாமல், அந்த ஓவரில் சாத்தடியும் நிகழ்ந்தது.
6,2,4,WD,0,1,4 என அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் விளாசப்பட்டது.
ஹர்திக் பாண்ட்யா ஓவரில், ஜேம்ஸ் நீஷம் 12 ரன்களில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் அடித்த ஷாட்டில் இருந்தா அவசரமே, போட்டியின் கள நிலவரத்தை நமக்கு உணர்த்துகிறது. இனி, எல்லா ஓவர்களையும் அடிக்க வேண்டிய கட்டாயம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு
40 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. டெய்லரும், ஜேம்ஸ் நீஷமும் களத்தில் உள்ளனர். இனி வரும் 10 ஓவர்களில், அவர்கள் அடிக்கப் போகும் ரன்களே, அவர்களின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கும். பும்ரா, புவனேஷுக்கு தலா 3 ஓவர்கள் மட்டும் மீதமுள்ளது.
இந்தியாவுக்கும் அதே கதை தான்.
கப்திலுக்கு முதல் ஓவரின் முதல் பந்தில் DRS அப்பீல் செய்து மிஸ்ஸானதில் தொடங்கி, ரிவியூ வாய்ப்பு இல்லாததால் ராஸ் டெய்லருக்கு சாஹல் ஓவரில் எல்பிகேட்க முடியாமல் போனது, அதே ராஸ் டெய்லருக்கு மூன்று முறை பந்து விண்ணளவு சென்றும், பீல்டர்கள் இல்லாத இடத்தில் லேண்ட் ஆனது வரை என இந்தியாவுக்கு சுக்ர திசை உக்ர திசையாக இருப்பது புரிகிறது.
ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேன் வில்லியம்சன், 95 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து, யுவேந்திர சாஹல் ஓவரில் கேட்ச்சானார். நியூசிலாந்தின் 250 ரன்கள் எனும் கனவில் விழுந்த பெரிய அடி. இருப்பினும், லாதம், நீஷம்எனும் ஹார்ட் ஹிட்டர்கள் களமிறங்க காத்திருப்பதால், இந்தியாவுக்கு சவால்கள் தொடங்குகின்றன.
34 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. இப்படியே போனால் இந்த ஸ்லோ பிட்சில்,
230 – நல்ல டார்கெட்
250 – சவாலான டார்கெட்
270 – மரண டார்கெட்
இந்த உலகக் கோப்பையில், ஒரு அணியின் மூன்றாவது ஸ்லோ செஞ்சுரி இதுவேயாகும்.
நியூசிலாந்து (31.2) vs பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் (28.5) vs தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்து (28.1) vs இந்தியா
இந்த உலகக் கோப்பையில், நியூசிலாந்தின் அதிக ரன் குவித்த வீரர்களில் முதலிடம் வகிக்கும் கேன் வில்லியம்சன், இன்று மீண்டும் ஒரு அரைசதத்தை பதிவு செய்திருக்கிறார். 39 வது ஒருநாள் அரைசதமாகும்.
தலைப்பு புரிந்ததா? கேன் வில்லியம்சனை ஏமாற்ற முடியாது என்றேன். 28.1 வது 100 ரன்களை எட்டியது நியூசிலாந்து. குறைவான ரன் ரேட் என்றாலும் கூட, புத்திசாலித்தனமான பேட்டிங் இது எனலாம். அபார கட்டை போட்டிருக்கும் கேன் வில்லியம்சன் அரை சதம் நோக்கி களத்தில்…
இந்திய பவுலர்கள் கேன் வில்லியம்சனை அவுட்டாக மேலும் பிரயாசப்பட வேண்டும். அவரை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றிவிட முடியாது.
25.1 வது பந்தை ராஸ் டெய்லருக்கு வீசினார் யுவேந்திர சாஹல். அந்த பந்து பேடில் பட, அவுட் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், அம்பயர் அவுட் கொடுக்காததால், இந்தியாவுக்கான DRS வாய்ப்பும் ஏற்கனவே பறிபோன நிலையில், கோலியால் மேற்கொண்டு அப்பீல் செய்ய முடியவில்லை. ஆனால், பந்து லெக் ஸ்டம்ப்பை தாக்கியது.
இப்படிலாம் சொன்னா தான் சீக்கிரம் அவுட் ஆவாய்ங்க… என்ன ஒரு ஸ்டிராடஜி!!
ராஸ் டெய்லர் – கேன் வில்லியம்சன் களத்தில் நிற்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு மிக மிக முக்கியமானது. இது கோலிக்கு தெரிவதை காட்டிலும், தோனிக்கு மிக அதிகமாகவே தெரியும். உச்சக்கட்ட உஷார் நிலையில் பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்தும் ஒருசேர இருந்தால் மட்டுமே, இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியும்.
ஜடேஜாவின் 18.2வது ஓவரில், 51 பந்துகளை சந்தித்த ஹென்றி நிகோல்ஸ் 28 ரன்களில் போல்டானார். இவ்வளவு நேரம் அவர் களத்தில் நின்றதற்கே, கேப்டன் கேன் வில்லியம்சுக்கு பால் காவடி எடுக்க வேண்டும்.
டேஞ்சரஸ் ராஸ் டெய்லர் களத்தில்….
நாம் களத்தில் கேப்டனாக இருந்தால், என்ன செய்திருப்போம் என்ற கற்பனையில்…
17 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 61-1. பார்ட்னர்ஷிப் 61 ரன்கள். களத்தில் நிற்பது பிளேயர், கேப்டன் என்பதைத் தாண்டிய ‘Mentor; வில்லியம்சன். என்றுமே ஆடாத நிகோல்ஸ்-ஐ தற்போது நன்றாக செட் செய்து விளையாட வைத்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் இப்போது, அவர்களிடம் நேர்த்தியான பவுலிங் 80 சதவிகிதம் எடுபடாது. Stupid Bowling என்று சொல்வார்களே… அது போன்று சில விஷயங்களை நமது பவுலர்கள் முயற்சி செய்தால், பலன் அளிக்கும் என நம்பிக்கை இருக்கிறது.
பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தின் ஸ்பெஷல் வீடியோ
‘Slow and Steady’ எனும் பார்முலாவில் சற்று சிறப்பாகவே ஆடிக் கொண்டிருக்கிறது நியூசிலாந்து 2ம் விக்கெட் பார்ட்னர்ஷிப். நிகோலஸ்-ஐ நிற்க வைப்பதில் கேப்டன் கேன் வில்லியம்சின் பங்கு அதிகம். 14 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 52-1.
பார்ட்னர்ஷிப்பும் அரைசதம் கடந்தது..
தொடக்கத்தில் மிக மிக நிதானமாக ஆடிய வில்லியம்சன் – நிகோலஸ் ஜோடி, இப்போது தங்களது ஸ்டிரைக்கை ரொடேட் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறது. அதேசமயம், மட்டமான பந்துகளையும் பவுண்டரிக்கு செலுத்த தவறுவதில்லை.
நியூசிலாந்தின் மைண்ட் செட்டை உடைக்க மீண்டும் ஒரு விக்கெட் இந்தியாவுக்கு அவசியம்.
நியூசிலாந்து 9 ஓவர்கள் முடிவில், 23 ரன்களே எடுத்திருக்கிறது. புவனேஷ் – பும்ரா பவுலிங்கின் துல்லியம், நியூசிலாந்து ரன் விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆனால், சிக்கல் என்னவெனில் ஃபார்மிலேயே இல்லாத நிக்கோலஸை பும்ரா ஓவரில் பவுண்டரி அடிக்க விடுவது. அது, அடுத்து வரும் ராஸ் டெய்லரின் தன்னம்பிக்கையை அது வெகுவாக அதிகரித்துவிடும்.
வெற்றிப் பெற என்ன செய்ய வேண்டுமோ, இந்தியா அதை கனக்கச்சிதமாக செய்யத் தொடங்கி இருக்கிறது. சுத்தமாக ஃபார்மிலேயே இல்லாத கப்திலை எடுத்தவுடனேயே காலி செய்ய வேண்டும் என்ற அசைன்மென்ட் சக்சஸ்.
ஆனால், இனிமேல் தான் இந்தியாவுக்கு முக்கிய வேலை காத்திருக்கிறது. நிகோலஸ் பெரிய ஃபார்மில் இல்லை. ஆகையால் கவலை வேண்டாம். ஆனால், ராஸ் டெய்லர் – கேன் வில்லியம்சன் ஜோடிக்கு தன்னம்பிக்கை அதிகம். அந்த தன்னம்பிக்கையில் ஊடுருவி, அவர்கள் இருவரையும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.
ஏம்ப்பா.. கேன் வில்லியம்சன் ஒன்டவுன் பேட்ஸ்மேன் தான் ஒத்துக்குறேன். அதுக்காக, எல்லா மேட்சுலையும் முதல் மூன்று ஓவருக்குள் அவரை களமிறங்க வைத்தால் எப்படி? பும்ராவின் 138 கி.மீ வேக பந்தில் எட்ஜ் ஆன கப்தில், 1 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, தனது முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.
புவனேஷ் குமார் வீசிய முதல் பந்திலேயே கப்திலுக்கு எல்பிடபிள்யூ கேட்டு, கோலி DRS செல்ல, பந்து லெக் ஸ்டெம்ப்புக்கு வெளியே சென்றதால், முதல் விக்கெட் மிஸ்ஸானது.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்… பிட்ச் ஸ்விங் பந்துகளுக்கு ஒத்துழைத்தால், புவனேஷ் குமாரை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. அவரது விக்கெட் பசியை உங்களால் அடக்க முடியாது.
விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், புவனேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா
பாயின்ட் 1 – ரோஹித் ஷர்மா, விராட் கோலி எனும் இவ்விரு பேட்ஸ்மேன்களை 20 ரன்களுக்குள் நியூசிலாந்து வீழ்த்திவிட்டால், அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அங்கேயே 60 சதவிகிதம் உறுதி செய்யப்பட்டுவிடும்.
பாயின்ட் 2 – இலங்கைக்கு எதிரான புவனேஷ் குமார் பந்துவீச்சில் ஸ்விங்கும் இல்லை ஃபேஸும் இல்லை. ஸோ, அவரை பிட்ச் பேட்டிங்குக்கு சப்போர்ட் செய்யும் பட்சத்தில், அவரை டார்கெட் செய்து அடித்து, இந்தியாவின் மெயின் ஸ்ட்ரீம் ஸ்பின்னர்கள் சாஹல், குல்தீப்பின் ஓவர்களில் அட்லீஸ்ட் தலா 6 ஓவர்கள் நன்றாக அடித்து ஆடி, பும்ராவிடம் Safe Cricket விளையாடினால், நிச்சயம் 310 – 330 ரன்களை நியூசிலாந்து குவிக்கலாம். பாண்ட்யாவின் பவுன்ஸ் பந்துவீச்சில் மட்டும் கவனமுடன் ஆட வேண்டும். இந்தியா வெறும் 5 பவுலர்களோடு ஆடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
பாயின்ட் 1 : நியூசிலாந்து இப்போது முற்றிலும் வலுவிழந்த அணியாக உள்ளது. லீக் சுற்றில், அவர்களது கடைசி மூன்று தொடர் தோல்விகள் மனதளவில் அவர்களின் நம்பிக்கையை குலைத்திருக்கிறது.
பாயின்ட் 2 : ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் ஆகிய இவ்விரு பேட்ஸ்மேன்களே நியூசிலாந்தின் ஒட்டுமொத்த பேட்டிங்கை தாங்கிப் பிடிக்கிறார்கள். வேகப் பந்துவீச்சே அவர்களது ஆகச்சிறந்த பலம்,
பாயின்ட் 3: நியூசிலாந்தின் பேட்டிங் பலவீனத்தை பயன்படுத்தி, இந்தியா அவர்களை 270-290 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட்டு, அபாயகரமான பவுலர்ஸ்களான போல்ட், பெர்கியூசனை நமது பேட்ஸ்மேன்கள் சமாளித்து விட்டால் இந்தியாவின் வெற்றி உறுதி.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, குல்தீப் யாதவ்வுக்கு பதிலாக யுவேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்.
இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், டாஸ் இன்னும் சிறிது நேரத்தில்…. டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.
11 வருடங்களுக்கு முன்பு, 2008ல் நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. அதில், இந்தியாவின் கேப்டன் விராட் கோலி… நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன். அதன் நிலைவலைகளை செய்தியாளர்களிடம் விராட் கோலி தற்போது பகிர்ந்திருக்கிறார். World Cup 2019 Semi Finals: ’நானும் வில்லியம்சனும் 11 ஆண்டுகள் கழித்து விளையாடுவதை அவருக்கு நினைவுப்படுத்துகிறேன்’ – விராட் கோலி
வணக்கம், வந்தனம் நேயர்களே… 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியோடு உங்களை வரவேற்பது நான் அன்பரசன் ஞானமணி. 2015 உலகக் கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியாவுடன் இந்தியா தோற்றது நினைவிருக்கலாம். அந்தப் போட்டியில் மட்டும் நாம் வென்றிருந்தால், 2015 உலகக் கோப்பை நமக்கு தான். ஆனால், இப்போது காட்சிகள் வேறு… நியூசிலாந்தை அரையிறுதியில் காலி செய்ய காத்திருக்கிறது இந்தியா.