உலகக்கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடும். இந்த இரண்டு அரையிறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் அணிகள் ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டியை சந்திக்கும்.
இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய கேப்டன் கோலியும் நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனும் 11 ஆண்டுகள் கழித்து மோதுகிறார்கள். ஆம் 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி மலேசியாவில் நடந்தது. அப்போது இந்திய அணிக்கு விராத் கோலி கேப்டனாகவும், நியூஸிலாந்ந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாகவும் செயல்பட்டார்கள். இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டி 11 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவை மீட்டெடுக்கிறது.
இது குறித்து பேசிய கோலி, “அந்த உலகக் கோப்பையில் விளையாண்ட எங்கள் பேட்ச், அவர்களின் பேட்ச், மற்றும் மற்ற அணி வீரர்கள், தேசிய அணிகளில் இடம் பிடித்தனர், இன்னும் விளையாடுகிறார்கள். இது ஒரு சிறப்பான நினைவு என்று நான் நினைக்கிறேன். ஒரு நாள் இது நடக்கும் என்று நானோ அவரோ ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. போட்டியில் வில்லியம்சனை சந்திக்கும் போது இதை நினைவுபடுத்துகிறேன். 11 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பையில் நாங்கள் அந்தந்த நாடுகளுக்கு மீண்டும் தலைமை தாங்குகிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய விராத் கோலி, “2008 உலகக் கோப்லை மட்டுமல்ல 2007-ல் நியூஸிலாந்து சென்று விளையாடியதிலிருந்து வில்லியம்சனை கவனித்து வருகிறேன். அவர் பேட்டிங் செய்யும்போது நான் ஸ்லீப்பில் நிற்பேன். அவரது பேட்டிங் ஸ்டைலைப் பார்த்து அப்போதே வியந்திருக்கிறேன். அவ்வளவு நேர்த்தியாக விளையாடும் அவர், இக்கட்டான சமயங்களில் அணியை நல்வழி நடத்திச் செல்கிறார்” என்றார்.