IND vs NZ Semi Final Weather Updates : இந்தியா- நியூசிலாந்து இடையிலான இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், நாளை நடைபெறும். நாளையும் மழை இருந்தால், லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் கிளைமேக்ஸை எட்டிவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுக்கட்டுகின்றன. இதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இன்று(ஜூலை.9) கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை மான்செஸ்டரில் எதிர்கொள்கிறது.
எப்படியும் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்க, இன்று ஜூலை 9-ம் தேதி மான்செஸ்டரில் மழை அச்சுறுத்தல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கான வாய்ப்பு – 50%
ஈரப்பதம் – 78%
காற்று – 13 km/h
அதிகபட்ச வெப்பநிலை – 19 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை – 14 டிகிரி செல்சியஸ்
மழைக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ind vs NZ Semi Final Weather, World Cup 2019
ஒருவேளை இன்று முழுவதும் மழை பெய்து, போட்டி நடைபெறவில்லை எனில், நாளை ‘Reserve Day’-ல் ஆட்டம் நடைபெறும். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு இந்த Reserve Day வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த மாற்று நாளின் போதும் மழை பெய்தால், புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில், இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். மற்றபடி போட்டி ஆரம்பித்து, இடையில் மழை பெய்து, மீண்டும் நிற்கும் பட்சத்தில், போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு DLS முறைப்படி ஆட்டம் நடைபெறும்.
லீக் சுற்றில், இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் இந்தியா தோல்வி அடைந்திருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய நியூசிலாந்து, இறுதிக் கட்டங்களில் வரிசையாக தோல்வியைத் தழுவி, பாகிஸ்தான் அணியின் மோசமான ரன் ரேட்டால் தப்பிப் பிழைத்து, நான்காவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.