IND vs NZ T20 World Cup Tamil News: 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் இன்று, ஞாயிற்று மாலை இரவு 7:30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் குரூப் -2 பிரிவில் உள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சீசனில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதன்மூலம் உலக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தது இந்தியா. சூப்பர் 12 சுற்றில் ஒரு அணி குறைந்தது 3 போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை உள்ளதால், எஞ்சியிருக்கும் 4 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தற்போது இந்திய அணி இருக்கிறது.
இதேபோல், நியூசிலாந்து அணியும் அதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. எனவே இரு அணிகளுக்கும் நாளை நடைபெறும் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
உலகக் கோப்பை தொடரில் முட்டுக்கட்டை போடும் நியூசிலாந்து
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும் அணியாகவே நியூசிலாந்து இருந்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் சர்வதேச அரங்கில் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8 போட்டிகளில் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து அணியே 2 முறையும் வெற்றி கண்டது. சமீபத்திய தொடர்கள் குறித்து அலசுகையில், 2019ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை தவறவிட்டது இந்தியா.
2020ம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடரை இழந்து வெறுங்கையுடனே நாடு திரும்பியது. தொடர்ந்து இந்தாண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது.
வெற்றி களிப்பை தொடருமா நியூசிலாந்து?
பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவான அணியாக தென்படும் நியூசிலாந்து ஏற்கனவே அதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்துள்ளது. அந்த அணி அதிரடியாக ஆடி ரன் குவிக்கும் வீரர் இன்றி தவித்து வரும் நிலையில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனும் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எனினும், கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டேரில் மிட்செல், மிடில் – ஆடரில் டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ் மற்றும் ஜேம்ஸ் நீஷம் போன்றோர் அணி நல்ல ஸ்கோரை எட்ட மட்டையை சுழற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் நியூசிலாந்தின் டிம் சவுத்தி கேப்டன் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தார். இதேபோல் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருந்தார் இஷ் சோதி. எனவே, இந்த வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் தங்களின் விக்கெட் வேட்டையை தொடரவே நினைப்பார்கள்.
மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட் போன்ற வீரர்களும் அந்த அணியின் பந்துவீச்சிற்கு வலு சேர்க்கிறார்கள். குறிப்பாக இடது கை பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஐபிஎல் தொடரில் பெரிதும் சோபிக்கவில்லை என்றாலும், சர்வதேச தொடர்களில் சிறப்பான பந்துவீச்சையே வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே அவர் அந்த அணியில் கவனித்தக்க வீரராக உள்ளார்.
எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடருமா இந்தியா?
சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களை உள்ளடக்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. எனவே அந்த அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வலுவான தொடக்க வீரர்களை கொண்டுள்ள இந்தியா நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரும் என சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், முன்னாள் கேப்டன் தோனி ஆலோசராக உள்ளதால் அணியில் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை என மற்ற சில முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அரையிறுதி வாய்ப்பை பிரசாக படுத்த வேண்டிய காட்டயத்தில் உள்ள இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு எழுச்சி பெறவே தீவிரம் காட்டும்.
Fast & Accurate!#TeamIndia #T20WorldCup pic.twitter.com/g6pVfKDsJ7
— BCCI (@BCCI) October 29, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.