News about Rishabh Pant, Mahakaleshwar Temple Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, ராய்ப்பூரில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் நாளை நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
‘பண்ட் விரைவில் குணமடைய வேண்டும்’: புகழ்பெற்ற கோவிலில் இந்திய வீரர்கள் சிறப்பு பூஜை
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலுக்கு இன்று காலை சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் ‘பஸ்ம ஆரத்தி’யில் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் இந்திய வீரர்க ளான சூரிய குமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சூரிய குமார் யாதவ், ‘ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என வேண்டி கொண்டோம். அவர் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டியது எங்களுக்கு மிக முக்கியம். நியூசிலாந்துக்கு எதிரான தொடரை நாங்கள் முன்பே வெற்றி பெற்று விட்டோம். அவர்களுக்கு எதிரான இறுதி போட்டியை விளையாட எதிர்பார்த்து இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
We prayed for the speedy recovery of Rishabh Pant. His comeback is very important to us. We have already won the series against New Zealand, looking forward to the final match against them: Cricketer Suryakumar Yadav pic.twitter.com/2yngbYZXfb
— ANI (@ANI) January 23, 2023
மீண்டும் வரும் பண்ட்
இந்திய இளம் விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் அவரது கார் தீப்பிடித்து எரிந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர் தொடக்கத்தில் டேராடூனிலும், பின்பு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவருக்கு கால் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில், அவர் 6 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டி வரும் என கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டில் நடக்க இருக்கும் ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil