India vs New Zealand Semi Final Score Updates : உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூலை.10) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. நேற்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து, மீண்டும் அதே இடத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடங்கியது.
ஆனால், நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், இந்திய அணி 49.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களில் சுருண்டது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.
07:25 PM – இந்திய அணி, 49.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களே எடுக்க, நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும், மகேந்திர சிங் தோனி 50 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து முன்னேறியது. தொடர்ந்து, இரண்டாவது முறை, உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேற்றப்பட்டது.
06:25 PM – இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு முடிவுக்கு வந்தாலும், ஜடேஜா தனி ஆளாக போராடிக் கொண்டிருக்கிறார். தோனி வழக்கம் போல், சுத்தமாக அடிக்க முயற்சிக்கவில்லை. ஆகையால், வேறு வழியின்றி ஜடேஜா அதிரடியான ஆட்டத்தை துவக்கியுள்ளார்.
05:50 PM – முடிந்தது கதை
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்தியா தனது ஆறாவது விக்கெட்டை பறிகொடுத்தது. 62 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்ட்யா, மிட்சல் சான்ட்னர் ஓவரில், வில்லியம்சன் கைகளில் பந்தை தூக்கி கொடுத்துவிட்டு பெவிலியன் சென்றுவிட்டார். தோல்வியை நோக்கி மிக வலிமையான நிலையில் இந்தியா….
05:30 PM – இனி கரை சேருமா இந்தியா?
வாய்ப்பில்லை என்பதே நமது கணிப்பாக உள்ளது. ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு, இந்தியா இனி ரெகவர் ஆகும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. அதற்கான ஸ்பேஸ் என்பதை நியூசிலாந்து இனி கொடுக்காது. இதன் பிறகு வெற்றியை தாரை வார்க்கும் அளவுக்கு நியூசிலாந்து D கிரேட் அணியும் அல்ல.. எனினும், பொறுத்திருந்து பார்ப்போமே!!
04:55 PM – தோனி ஏன் களமிறங்கவில்லை?
நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் படி, விக்கெட் மிக மிக மெதுவாக ரியாக்ட் செய்வதால், பொறுமையாக ஆடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று நிர்வாகம் கருதுகிறது. அதாவது, நியூசிலாந்து பவுலர்களை மேற்கொண்டு செட் ஆக விடாமல், துரிதமாக ரன்களை சேர்க்க வேண்டும் என்பதனாலேயே ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கி இருப்பதாக தெரிகிறது. பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறது இந்திய அணி.
04:35 PM – தினேஷ் கார்த்திக் தனது வாழ்க்கையின் கடைசிக் கட்ட கிரிக்கெட்டை முடித்துவிட்டார் என்றே தோன்றுகிறது. அரையிறுதியில் தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்த கார்த்திக், 25 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து கார்த்திக் வெளியேறினார். அவர் அவுட்டான பிறகு, தோனி களமிறங்குவார் என எதிர்பார்த்தால், ஹர்திக் பாண்ட்யாவை களமிறக்கி இருக்கிறது இந்திய அணி.
04:10 PM – நியூசிலாந்து உண்மையில் மிக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறது எனலாம். ஹென்றி மற்றும் போல்ட் மிக துல்லியமான லைன் அன்ட் லென்த்தில் பந்துவீசி வருகின்றனர். அதன் பலனாய் அவர்களுக்கு கிடைத்திருப்பது மூன்று மெகா விக்கெட்டுகள். ரோஹித், கோலி, ராகுல். இந்திய அணியின் முக்கால்வாசி விக்கெட்டுகளை நியூசிலாந்து வீழ்த்தி விட்டதற்கு சமம் இது.