/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-09T133927.152-1.jpg)
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது கிடையாது. அதில் 8-ல் வெற்றி கண்டு இருக்கிறது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
India vs Pakistan hockey, Asian Champions Trophy 2023: ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கியது. வருகிற 12-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் களமாடி வருகின்றன.
இந்த அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும். நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான ரேசில் உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை
ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வீறுநடை போடுகிறது. 3 முறை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா போராட்டமாகும். இதில் வெற்றி பெற்றால் உமர் பூட்டா தலைமையிலான பாகிஸ்தான் அணி சிக்கலின்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். அந்த அணி குறைந்தபட்சம் 'டிரா'வாவது செய்தாக வேண்டும். மாறாக பாகிஸ்தான் தோல்வியை தழுவினால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி அரைஇறுதியை எட்டுவதற்கு பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் முனைப்புடன் காத்திருக்கிறது. மொத்தத்தில் வலுவான இவ்விரு அணியினரும் முதல் வினாடியில் இருந்தே 'யுத்தம்' போல் வரிந்து கட்டுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நேருக்கு நேர்
சர்தேச ஹாக்கி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 178 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 64 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 82 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தன. ஆனால் சமீப காலமாக இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது கிடையாது. அதில் 8-ல் வெற்றி கண்டு இருக்கிறது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. 2022-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.