நியூசிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கேப்டன் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இன்று தனது முதலாவது லீக் போட்டியில், கேப்டன் பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
இந்தியா – பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே, நியூஸிலாந்தின் மவுண்ட் மௌங்கனுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய மகளிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிர்தி மந்தனா 52 ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து தீப்தி சர்மா 40 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் ஸ்னே ரானா, பூஜா வாஸ்ட்ராகர் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். ஸ்னே ரானா (53) ரன்களும் பூஜா வாஸ்ட்ராகர் (67) ரன்களும் குவித்தனர்.
இதனால், இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி மலமலவென விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி, 107 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை சிட்ரா அமீன் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில், சிறப்பாக பந்துவீசிய ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜூலன் கோஸ்வாமி, ஸ்நேஹ் ராணா தலா 2 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா, மேக்னா சிங் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ், கூறுகையில், “முதல் போட்டியில் வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் நிறைய விளையாட வேண்டியுள்ளது. மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் வீழ்ந்தால், அது அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். தொடக்கத்தில் விளையாடும் வீராங்கனைகள் இது போன்ற பெரிய டோர்னமெண்ட்களில் நன்றாக விளையாடுவார்கள். ஆல் ரவுண்டர்கள் ஸ்நேஹ், தீப்தி சிறப்பாக விளையாடினார்கள். பூஜா அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா கூறுகையில், “ஆட்டத்தின் நடுவில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். நாங்கள் சில மோசமான பந்துகளை வீசினோம். அதனால், ரன் போய்விட்டது. ஸ்நேஹ், பூஜா நன்றாக விளையாடினார்கள். நாங்கள் ஆட்டத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“