ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம போட்டியாளரான இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். வீரர்களும் உணர்வுபூர்வமாக, இனம்புரியாத பதற்றத்திற்குள்ளாகி விடுவார்கள். எனவே இன்று நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இதே துபாயில்தான் அந்த சம்பவம்…
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த டி-20 உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது.
அந்த ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை அதன் முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 57 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி, 17.5 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் பாபர் அசாம் (79) மற்றும் முகமது ரிஸ்வான் (68) ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 152 ரன்களை குவித்தனர். அதோடு 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தனர். இந்த ஆட்டம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றுவரை பெரும் இடியாக இருந்து வருகிறது.
பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்தியா
இந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்க இம்முறை வலுவான மற்றும் முன்னணி வீரர்களுடன் ஆசிய கோப்பையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் கே.எல் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் தொடக்க பேட்டிங் வரிசையை பலப்படுத்துகிறார்கள். இதில் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
மிடில் வரிசையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் தங்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு வலுவான ஸ்கோர் உறுதி. அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வேண்டியிருக்கும். காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் பந்து வீச்சில் மிரட்ட தயார் நிலையில் உள்ளனர்.