பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் 8 வது சீசனில், இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 6 முறை கோப்பையை வென்ற இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த தொடரில், பங்களாதேஷில் உள்ள சில்கெட்டில், இந்தியா - பாகிஸ்தான் பெண்கள் அணிகள் இடையே லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிடா தார் 37 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை மேகனா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய, ஜெமிமா 2 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்த படியே இருந்தனர். இந்திய அணியில், மந்தனா 17 ரன்களும், தீப்தி 16 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 12 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
இந்திய அணி 19.4 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக பேட்டிங் செய்த நிடா தார் பந்துவீச்சிலும் 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அதே போல, அந்த அணியின் மற்றொரு வீராங்கனை நஸ்ரா சந்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"