IND vs SA ODI Tamil News: தென்ஆப்பிரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்டில் 1-2 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இதில், இவிவிரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பார்ல் நகரில் (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த நிலையில், அந்த அணியில் குயின்டான் டி காக் மற்றும் ஜேன்மன் மலான் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மலான் 6 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். தொடர்ந்து குயின்டான் டி காக் 27 ரன்களும், மார்க்ராம் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் பவுமாவுடன், வான்டெர் துஸ்சென் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் பவுமா மற்றும் துஸ்சென் ஆகியோர் தங்களது சதத்தை பதிவு செய்து அசத்தினர்.
இதில் கேப்டன் பவுமா 110 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பும்ரா பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட் ஆனார். அடுத்ததாக துஸ்செனுடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய வான்டெர் துஸ்சென் 129 (96) ரன்களும், டேவிட் மில்லர் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்க அணி 296 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால், இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Innings Break!
— BCCI (@BCCI) January 19, 2022
South Africa post a total of 296/4 on the board.#TeamIndia chase coming up shortly. Stay tuned!
Scorecard – https://t.co/PJ4gV8SFQb #SAvIND pic.twitter.com/ZUklQJGFDy
பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரகளான ராகுல் மற்றும் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த தவான் – கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரை சதம் கடந்த தவான் 79 ரன்களில் மகராஜ் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகளை விளாசியிருந்தார்.
பின்னர் கோலியும் அரைசதத்துடன் வெளியேறினார். 51 ரன்கள் அடித்த கோலி, ஷாம்சி பந்தில் பவுமாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் முறையே 16 மற்றும் 17 ரன்களில் அவுட் ஆக, இந்திய அணி 188 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 2 ரன்களிலும், அஸ்வின் 7 ரன்களிலும் அவுட் ஆக இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால், அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாக்குர் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். அவர் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சருடன் அரை சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் வீழ்ந்தது.
தென்னாப்பிரிக்க பந்து வீச்சில், நிகிடி, ஷாம்சி, பெலுக்வாயோ தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“