IND vs SA 1st ODI Match 2022 Score | IND vs SA 1வது ஒருநாள் சர்வதேசபோட்டி 2022 ஸ்கோர்: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு; தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜென்னெமேன் மாலன், குவிண்டன் டி காக் நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தினர். மாலன் 42 பந்துகளில் 22 ரன் எடுத்திருந்த நிலையில், ஷர்துல் தாக்கு பந்துவீச்சில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த தெம்பா பவுமா 8 ரன்களில் ஷர்துல் தாக்கூர் போல்ட் அவுட் ஆனார். இவரை அடுத்து வந்த எய்டென் மர்க்ராம் குல்தீப் யாதவ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
மறுமுனையில், அரை சதம் அடிப்பா என்று எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டி காக் 54 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவி பிஷ்னோய் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால், அதற்கு பிறகு வந்த ஹெய்ன்ரிச் க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அதிரடியாக விளையாடி இருவரும் அரை சதம் அடித்தனர். இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. ஹெய்ன்ரிச் க்ளாசன் 65 பந்துகளில் 74 ரன்களும் எய்டென் மர்க்ரம் 63 பந்துகளில் 75 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். சுப்மன் கில் 3 ரன்களிலும், தவான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த ருதுராஜ் மற்றும் இஷான் கிஷன் பொறுமையாக ஆடி ரன் சேர்த்தனர். ருதுராஜ் 19 ரன்களிலும், இஷான் கிஷன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதனால் அடுத்து விக்கெட் ஏதும் இல்லாமல் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. 8 பவுண்டரிகளை விளாசிய ஸ்ரேயாஸ் 50 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷ்ர்துல் தாக்கூர் கம்பெனி கொடுக்க, சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார்.
இந்திய அணி 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தாக்கூர் 33 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய குல்தீப் யாதவ் டக் அவுட் ஆனார். அவேஷ் கான் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து ரவி பிஷ்னோய் இறங்கி 4 ரன்கள் அடித்திருந்த நிலையில், கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் பந்து வைடாக, மீண்டும் வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கினார் சஞ்சு சாம்சன். அடுத்த 2 பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் 4 ஆவது பந்தில் ரன் எடுக்க தவறினார். 5 ஆவது பந்தை பவுண்டரிக்கு விளாசினாலும், வெற்றிக்கு கடைசி பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் 1 ரன் அடிக்க இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
சஞ்சு சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் அடித்திருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் எங்கிடி 3 விக்கெட்களையும் ரபாடா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ், ராகுல் திரிபாதி, முகேஷ் குமார், ருதுராஜ் கெய்க்வாட் , ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய்
தென்ஆப்பிரிக்கா அணி:
ஜான்மேன் மலான், குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நார்ட்ஜே, ஹெயின், ஹெயின், லுங்கி என்கிடி, ரீசா ஹென்ட்ரிக்ஸ்
இரு அணியில் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்
தென்ஆப்பிரிக்கா அணி:
ஜான்மேன் மலான், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.