scorecardresearch

IND vs SA: முதல் டி20 போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென்ஆப்பிக்கா

IND vs SA T20 Series 2022: இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் காயம் காரணமாக விலகிய நிலையில், புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

IND vs SA 1st T20 Live Score Updates in tamil
IND vs SA t20 series,  IND vs SA 1st  t20

India vs south Africa 1st T20 playing 11: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது.

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த டி-20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்ட நிலையில், அவரது வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காய அவதியால் அவர் தொடரில் நேற்று விலகினார்.

இதே போல் பேட்டிங் பயிற்சியின் போது வலது கையில் ஏற்பட்ட காயத்தால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளார். இதனால் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் வீரர் ரிஷாப் பண்டும், துணை கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தான் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட், “கேப்டன் பதவி சிறப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் மிகவும் நல்ல சூழ்நிலையில் வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் கேப்டன் பதவி வகிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு அளித்ததற்காக கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ஐ.பி.எல். போட்டியில் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுள்ள பாடம் வரும் நாட்களில் எனக்கு உதவும் என்று கருதுகிறேன். கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். எனது கிரிக்கெட் ஏற்றம், இறக்கத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ராகுல் தொடக்க வீரராக ஆடி இருந்ததால் பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றம் இருக்காது. எங்களிடம் அதிகமான தொடக்க வீரர்கள் இல்லை. ஒரு அணியாக நாங்கள் அடைய விரும்பும் இலக்கை பற்றி ஆலோசித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

இளம் வீரர்கள் படை…

தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்கள் இடம்பித்துள்ளனர். இதில், தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமாட வாய்ப்புள்ளது. மிடில்-ஆடரில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா போன்றோர் களமிறங்கி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல் போன்றோர் மிரட்ட காத்திருக்கின்றனர்.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் குயின்டான் டி காக், டேவிட் மில்லர், மார்க்ராம், வான்டெர் துஸ்சென், ரபடா உள்ளிட்ட திறமையான வீரர்கள் களமாட இருக்கிறார்கள். இதில் டேவிட் மில்லர் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரன்மழை பொழிந்து குஜராத் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். அவர் நல்ல பார்மில் இருப்பது அந்த அணிக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். பந்துவீச்சிற்கு பிரிட்டோரியஸ், ரபடா, அன்ரிச் நோர்டியா, மார்கோ ஜேன்சன், இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி போன்ற வீரர்கள் பலம் சேர்க்கிறார்கள்.

டி-20 உலக கோப்பை தொடர் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இத்தொடர் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் இத்தொடரில் பிசிசிஐ சில புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தொடரில் ஜொலிக்கும் வீரர்களுக்கு உலக கோப்பை வாய்ப்பு கிடைக்கலாம். எனவே, கூடுதல் உத்வேகத்துடன் இந்திய அணி களமாடும்.

அதுமட்டுமல்லாமல், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வரும் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று புதிய உலக சாதனை படைக்க தீவிரம் காட்டும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக்

தென்ஆப்பிரிக்கா:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, வெய்ன் பார்னெல் என்கிடி, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

இந்தியா:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

தென்ஆப்பிரிக்கா:

டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

இந்திய பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

ஸ்கோர் 6.2 ஓவர்களில் 57 ரன்களை கடந்தபோது 15 பந்துகளில் 3 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்திருந்த ருத்துராஜ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இந்தியாவின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்த நிலையில், அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் கேசவ் மகராஜ் வீசிய 13-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர் 2 பவுண்டரி அடித்தார். ஆனால் அதே ஓவரின் கடைசிபந்தில் ஆட்டமிழந்தார்.  48 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 ரன்கள் குவித்தார்.

அடுத்து அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 27 பந்துகளில 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.

அதிரடியாக விளையாடிய மில்லர் – டூசேன்

தொடர்ந்து 212 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், 2-வது விக்கெட்டுக்கு இணைந்த குயிண்டன் டிகாக், டுவைன் பிரிட்டோரியஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் 13 பந்துகளை சந்தித்த பிரிட்டோரியஸ் 4 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து டிகாக் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8.4 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இணைந்து வான்டர் டூசேன், டேவிட் மில்லர் ஜோடி மேற்கொண்டு விக்கெட் சரியாமல் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.

மேலும் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில், 19.1 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 31 பந்துகளை சந்தித்த மில்லர் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் 64 ரன்களும், 46 பந்துகளை சந்தித்த வான்டர் டூசன் 5 சிக்சர் 7 பவுண்டரியுடன் 75 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர்.

இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 11 ஓவர்களில் 131 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி வரும் 12-ந் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது.

South Africa in India, 5 T20I Series, 2022Arun Jaitley Stadium, Delhi   06 July 2022

India 211/4 (20.0)

vs

South Africa   212/3 (19.1)

Match Ended ( Day – 1st T20I ) South Africa beat India by 7 wickets

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs sa 1st t20 live score updates in tamil