IND vs SA 1st T20 Match 2022 Live Score | IND vs SA T20 போட்டி 2022 நேரலை ஸ்கோர்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. தற்போது அதே உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் தென்ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய பேட்டிங் வரிசை சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், பந்துவீச்சு வரிசை சோதப்பியது அணிக்கு சற்று பின்னடைவைக் கொடுத்தது.
இந்திய பேட்டிங் வரிசையில் தனது ஃபார்மை மீட்டுள்ள முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் வலுவாக உள்ளார்கள். தொடக்க வீரர் ராகுல் அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்திலும், கேப்டன் ரோகித் நிலைத்து ஆட வேண்டிய அவசியமும் உள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாண்டியாவுக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புவிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் களமாட இருக்கிறார்.
இதேபோல், முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா இந்த தொடரில் பங்கேற்ற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க உள்ளார். பந்துவீச்சு வரிசையில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடிக்க வாய்ப்பு அதிகமுள்ள நிலையில், அவரும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் இணைந்து மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட களம் காணாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு தற்போதைய தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படலாம். ஏனெனில், அஸ்வின் உலக கோப்பை போட்டிக்கான அணியில் உள்ளதால், அதற்கு முன்பாக ஓரிரு ஆட்டங்களில் ஆடுவது அவசியம் என்று கேப்டன் ரோகித் சர்மா ஏற்கனவே கூறியிருக்கிறார். அவரும் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, கடந்த ஜூன் மாதத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. தொடரை கைப்பற்றும் அளவிற்கு போட்ட போட்டி போட்டது. ஆனால் மழையின் குறுக்கீடு, அந்த அணியின் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதை இம்முறை நிறைவேற்றும் எண்ணத்தில் தென்ஆப்பிரிக்கா உள்ளது.
இங்கிலாந்து மண்ணில் நடந்த சமீபத்திய தொடரிலும் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்திய தென்ஆப்பிரிக்க அதே ஃபார்மை தொடரும் என்று எதிர்பார்க்கலாம். அந்த அணியின் பேட்டிங்கில் வரிசைக்கு குயின்டான் டி காக், ரோசவ், மார்க்ராம், டேவிட் மில்லர் போன்ற திறமையான வீரர்கள் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி, பிரிட்டோரியஸ், ஜேன்சன் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். மொத்த நல்ல பலத்துடன் உள்ள இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 8-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
திருவனந்தபுரம் ஆடுகளம்
55 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்டு ஸ்டேடியத்தில் நடக்கும் மூன்றாவது டி20 மற்றும் ஒட்டுமொத்த நான்காவது சர்வதேச போட்டியாகும். 2017-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 2019-ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2018ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கு விளையாடிய ஒரே ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
தென்ஆப்பிரிக்கா அணி:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், லுங்கி ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகாராஜ், ஹென்ரிச் கிளாசென்
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், தினேஷ் கார்த்திக், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி , தீபக் ஹூடா
இரு அணி வீரர்கள் உத்தேச வீரர்கள் பட்டியல்:
இந்தியா
ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்
தென்ஆப்பிரிக்கா
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் அல்லது ரிலீ ரோசோவ், டெம்பா பவுமா (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் அல்லது டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே.
டாஸ் வென்ற இந்தியா
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுமா ஆட்டமிழந்த நிலையில், அர்ஷிதீப் சிங் வீசிய 2-வது ஓவரின் 2-வது பந்தில் குயிண்டன் டிகாக், 5 மற்றும் 6 வது பந்தில், ரோசோவ், மில்லர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது ஓவரில் ஸ்ட்பஸ் ஆட்டமிழந்ததை நிலையில் தென்ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பிறகு 6-வது விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரம், பர்னல் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து விளையாடி விளையாடியது. இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில், மார்க்ரம் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பர்னல் 24 ரன்களில் ஆட்டமிழந் நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய கேசவ் மகராஜ் 35 பந்துகளில் 41 ரன்கள் குவித்து வெளியேறினார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும்,? சஹார், ஹர்ஷெல் பட்டேல் தலா 1 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 107 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 2 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மு்ன்னாள் கேப்டன் விராட்கோலி 3 ரன்களில் நடையை கட்டினார்.
இதனால் இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் இருவரும் அடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்ட நிலையில், அடித்து ஆடி ரன்கள் சேர்த்தனர்.
இதில் ராகுல் ஒருபுறம் நிதானமாக விளையாடினாலும் மறுமுனையில் சூர்யகுமார் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் அதிரடியால் இந்திய அணி 16.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ், 34 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 ரன்களும், ராகுல் 56 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 51 ரன்களும் குவித்து களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அக்டோபர் 2-ந் தேதி கவுகாத்தியில் நடைபெறுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.