Mayank Agarwal’s double Century: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் அபார இரட்டை சதம் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர். சிறப்பாக விளையாடிய நிலையில் முதல் நாள் ஆட்டம் 59.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் மயங்க் அகர்வால் 204 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதையடுத்து ரோகித் சர்மாவும் சதமடித்தார். நிலைத்து சிறப்பாக விளையாடிய நிலையில் ரோகித் சர்மா 176 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி மேலும் கூடுதலாக 154 பந்துகளை சந்தித்து தனது இரட்டை சதம் அடித்தார். இறுதியில் 215 ரன்கள் எடுத்த நிலையில், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.
வலுவான அணி கிரிக்கெட் அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்ததை பலரும் சமூக ஊடகங்களில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மயங்க் அகர்வால் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
மயங்க் அகர்வாலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 502 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.