ரோஹித் அபார சாதனை! 395 ரன்கள் இலக்கு - வெற்றியை நோக்கி இந்திய அணி!
கடந்த 41 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் ஓப்பனர் எனும் சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்
41 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் ஓப்பனர் எனும் சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
Advertisment
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 7 விக்கெட்டுகளுக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
டெஸ்ட் ஓப்பனராக முதல் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா, 244 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு புறம் இரட்டை சதம் விளாசினார் மாயங்க் அகர்வால். 371 பந்துகளில் 215 ரன்கள் குவித்து அவுட்டானார். 502 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்ய, தென்னாப்பிரிக்க அணியில் டீன் எல்கர் 160 ரன்களும், டி காக் 111 ரன்களும் எடுக்க, முதல் இன்னிங்ஸில் அந்த அணி 431 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில், மாயங்க் அகர்வால் 7 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா, சிறப்பாக விளையாடி 149 பந்துகளில் 127 ரன்கள் குவித்தார். இதில், 7 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும்.
இதன் மூலம், கடந்த 41 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் ஓப்பனர் எனும் சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். 1978-79 ஆண்டில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய ஓப்பனர் சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்தார். அதன் பிறகு இப்போது தான் அச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, 323-4 என்ற இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய, தென்.ஆ.,வுக்கு 395 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் காணலாம்.