Cricket news in tamil: “டிக்கெட்டுகள் விற்கப்பட்ட வெளிப்படையான முறை கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.”- அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (ஏசிஏ) செயலாளர் தேவஜித் சைகியா
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை இரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ஏற்கனவே அங்கு சென்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா – தென் ஆபிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி விட்டதாக அசாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (ஏசிஏ) செயலாளர் தேவஜித் சைகியா பேசுகையில், டிக்கெட்டுகள் விற்கப்பட்ட வெளிப்படையான முறை கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
நாங்கள் மைதானம் ஹவுஸ் ஃபுள் எதிர்பார்க்கிறோம். சுமார் 38,000 இருக்கைகளில் 21,200 பொது மக்களுக்கான டிக்கெட்டுகள் இரண்டு கட்டங்களாக ஆன்லைனில் விற்கப்பட்டன. சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. மேலும் 12,000 டிக்கெட்டுகள் மாவட்ட சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெற்று, அவை கவுண்டர்கள் மூலம் விற்கப்பட்டன.
வழக்கமாக, மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் டிக்கெட்டுகளில் 40-50 சதவீதம் விற்பனையாகாமல் திரும்பும். இந்த முறை, 100 டிக்கெட்டுகள் கூட எங்களிடம் திரும்பி வரவில்லை. மீதமுள்ள டிக்கெட்டுகள் மாநில சங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் சில சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கு பாஸ்களாக வழங்கப்படுகின்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil