IND vs SA 2nd T20 Live Score Updates: ரோஹித் சர்மாவின் இந்தியா அணி, டெம்பா பவுமாவின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடரவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் அரிய தொடரை வெல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்து தரப்பிலும் சிறப்பாக உள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெல்லும்பட்சத்தில் தொடரை வென்று அசத்தலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கவுகாத்தியில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா விளையாடும் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை. ஆனால் அதே நேரத்தில், ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி பரிசோதனை செய்ய விரும்புகிறது என்ற உண்மையை புறக்கணிக்க முடியாது. ஜஸ்பிரித் பும்ரா காயத்துடன் வெளியேறி, முகமது ஷமி இன்னும் கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால், முகமது சிராஜு இன்னும் சில போட்டிகளில் வாய்ப்பு பெறலாம்.
தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் திணறி வரும் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு பெரும் அழுத்தம் இருக்கும். மறுபுறம், கடந்த ஐந்து இன்னிங்ஸ்களில் நான்கு அரைசதங்கள் அடித்த ரீசா ஹென்ட்ரிக்ஸ், செம பார்மில் உள்ளார். ஹென்ட்ரிக்ஸை டாப் ஆர்டரில் சேர்க்க, தென்னாப்பிரிக்கா ரிலீ ரோசோவை வெளியே உட்காரவைத்து, வெய்ன் பார்னலுக்கு பதிலாக டுவைன் பிரிட்டோரியஸைக் கொண்டு வரலாம்.
கவுகாத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்
இந்தியா: கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், தீபக் சாஹர், ஆர்.அஷ்வின், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ரீலி ரோசோ, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பர்னல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி எங்கிடி
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தென்னாப்பிரிக்க பவுலர்கள் திணறினர். இந்திய அணி 96 ரன்களை சேர்த்தப்போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடி ரோகித் சர்மா 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசிய ரோகித் மகராஜ் பந்தில் ஸ்டப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் தொடக்க முதலே அடித்து ஆனார். இதற்கிடையில் அரைசதம் அடித்த ராகுல் சிறிது நேரத்தில் அவுட் ஆனார். 28 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்த ராகுல், மகராஜ் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். ராகுல் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். சூர்யகுமார் 18 பந்தில் அரைசதம் அடித்தார். 22 பந்தில் 61 ரன்கள் குவித்த சூர்யகுமார் ரன் அவுட் முறையில் வெளியேறினார். சூர்யகுமார் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக ஆடினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 28 பந்தில் 49 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். தினேஷ் கார்த்திக் 17 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.
தென்னாப்பிரிக்கா பேட்டிங்
தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பவுமா மற்றும் டி காக் களமிறங்கினர். முதல் ஓவரை மெய்டன் ஆக்கிய பவுமா அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரீலி ரோசோ 2 பந்துகளை மட்டும் சந்தித்து டக் அவுட் ஆனார். இருவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய மார்க்ரம் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 19 பந்தில் 33 ரன்கள் சேர்த்த அவர், அக்சர் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து டி காக் உடன் ஜோடி சேர்ந்த மில்லர் இந்திய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினர். இவர்களின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
சிறப்பாக ஆடிய மில்லர் சதம் விளாசினார். இருப்பினும் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மில்லர் 106 ரன்களும், டி காக் 69 ரன்களும் அடித்தனர். மில்லர் 47 பந்துகளில் 106 ரன்கள் விளாசினார். இதில் 7 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும். டி காக் 48 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.