இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியில் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
IND vs SA 2nd Test Day 2 Highlights
இந்தியா பிளேயிங் XI: ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, அஜின்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.
தொடக்கத்தில் ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ரபாடா ஓவரில் வெளியேற, மாயங் அகர்வாலும், புஜாராவும் அபாரமான பார்ட்னர்ஷிபை வெளிப்படுத்தினர். முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால், இப்போட்டியிலும் சதம் விளாசி அசத்தினார்.
195 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து, ரபாடா பந்துவீச்சில் மாயங்க் கேட்ச் ஆனார். புஜாரா 58 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ரஹானேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதம் அடிக்க, நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்திருந்தது.
கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், ரஹானே 59 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் தூணாக நின்ற கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 91 ரன்னில் அவுட்டானார். இருவரும் இணைந்து 225 ரன்கள் குவித்தனர்.
இதையடுத்து, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது.
டீன் எல்கரை 6 ரன்னிலும், மார்க்ரமை 0 ரன்னிலும் உமேஷ் யாதவ் வெளியேற்ற, பவுமா 8 ரன்களில் ஷமி ஓவரில் அவுட்டானார்.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.