2015.... இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி. உள்ளூரில் புலியாகவும், வெளியூரில் இன்ஸ்டால்மென்ட் புலியாகவும் வலம் வந்துக் கொண்டிருந்த தோனி தலைமையிலான இந்திய அணியை, அதன் செக்டாரில் வைத்து எதிர்கொள்வது எனில், அதற்கு திமிர் வேண்டும்... அசாத்திய தெனாவட்டு வேண்டும்.
இவற்றையெல்லாம் ஃபுல்பில் செய்து வந்திருந்த தென்னாப்பிரிக்க அணியின் அந்த அளவிலான ஆதிக்க ஆட்டத்தை தோனி & கோ எதிர்பார்க்கவில்லை. தோனி எதிர்பார்த்திருந்தாலும், அவ்வளவு சேதாரம் வரும் என கற்பனை செய்யவில்லை.
யெஸ்... மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்றும், 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்றும் கைப்பற்றி, இந்திய மண்ணின் கிரிக்கெட் வேரில் தனது வருகையை மிக அழுத்தமாக பதிவு செய்து, இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் ஜீன்களில் சீன் போடாமல் தோல்வி ரேகைகளை பதிய வைத்துச் சென்றது டி வில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா.
அத்தொடரில், டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றினாலும் ஒருநாள் மற்றும் டி20 தொடரை சொந்த மண்ணில் இழந்தது. அதிலும், மும்பையில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் சுழன்றடித்த டி வில்லியர்ஸ், 61 பந்துகளில் 119 ரன்கள் விளாச, 50 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து, 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சம்பவம் செய்தது.
அதன்பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.
ஆனால், இம்முறை காட்சிகள் வேறு.. கேப்டன் வேறு.. சவாலும் வேறு.
சரம் வெடிக்க டி வில்லியர்ஸ் இல்லாமல் தென்.ஆ., களமிறங்க, தோனி இல்லாமல் களம் காண்கிறது இந்தியா. ஆனால், விராட் கோலி எனும் Brobdingnagian இந்தியா வசம் உள்ளது. அதன் பேட்டில் இருந்து அறுவடை செய்யப்படும் ரன்கள் தனது மகசூலை இதுவரை குறைக்கவில்லை.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் (vc), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (WK), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, க்ருனல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ம் தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மொஹாலியிலும் (செப் 18) மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (செப் 22)ம் தேதியும் நடைபெறுகிறது.
2015 தோல்விக்கு பரிசளிக்குமா இந்தியா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.