IND vs SL 1st ODI Match 2023 highlights in tamil: இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியாவிடம் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இந்நிலையில், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடக்கிறது. இப்போட்டியானது பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Sri Lanka in India, 3 ODI Series, 2023Barsapara Cricket Stadium, Guwahati 06 February 2023
India 373/7 (50.0)
Sri Lanka 306/8 (50.0)
Match Ended ( Day – 1st ODI ) India beat Sri Lanka by 67 runs
IND vs SL: இரு அணி ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
இலங்கை:
பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் களமிறங்கினர்.
இந்த ஜோடி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதில் அரைசதம் அடித்த கில் 60 பந்துகளில் 11 பவுண்டரிகளை விரட்டிய நிலையில், 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அரைசதம் விளாசியுள்ள கேப்டன் ரோகித் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சில பவுண்டரிகளை ஓட விட்ட அவர் தில்ஷான் மதுஷங்க வீசிய 23.1 வது ஓவரில் இன்சைடு எட்ச் ஆகிய போல்ட் அவுட் ஆனார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்
24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 180 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட்கோலி அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்க தொடங்கினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களுக்கும், அதிரடியாக ஆடிய ராகுல் 29 பந்துகளில் 39 ரன்களும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களும் அக்சர் பட்டேல் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விராட்கோலி சதம்
ஒருபுறம் விக்கெட் சரிதாலும் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்திய விராட்கோலி சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது 45-வது சதத்தை கடந்த விராட்கோலி இலங்கை அணிக்கு எதிராக 9-வது சதத்தை எடுத்துள்ளார். இந்த சதத்தின் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை விராட்கோலி ஆக்கிரமித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியிலில் 3-வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து ஆடிய விராட்கோலி 113 ரன்கள் எடுத்து ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்துள்ளது. ஷமி 4 ரன்களுடனும், சிராஜ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில், ரஜிதா 3 விக்கெட்டுகளும், மதுஷனகா, கருணரத்னே, ஷானகா, டிசில்வா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 374 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.
இலங்கை பேட்டிங்
தொடர்ந்து 374 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், பெர்னாண்டோ 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய குஷால் மெண்டீஸ் ரன்கணக்கை தொடங்கமலே வெளியேறினார். இவர்கள் இருவரையும் முகமது சிராஜ் வெளியேற்றினார். இதனால் 23 ரன்களுக்கு 2 விக்கெட்களை பறிகொடுத்த இலங்கை அணியில் 3-வது விக்கெட்டுக்கு அசலங்கா களமிறங்கினார்.
தொடக்க வீரர் நிசங்கா – அசலங்கா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்த நிலையில், அசலங்கா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போதுவரை 20 ஓவர்களில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. நிசங்கா 41 ரன்களுடனும், டிசில்வா 25 ரன்களுடனும் ஆடி வந்த நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய டிசில்வா 40 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷானகா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அடுத்த வந்த வீரர்களான ஹசரங்கா 16 ரன்களிலும், வில்லாலேக் ரன் கணக்கை தொடங்காமலுதம், கருணரத்னே 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இலங்கை அணி 206 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் மூலம் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிய ரசிகர்களுக்கு 9-வது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த ஷானகா – ரஜிதா ஜோடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷானகா சதமடித்து அசத்தினார்.
ஆனாலும் நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷானகா – ரஜிதா ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து அசத்தினர். ஷானகா 108 ரன்களுடனும், ரஜிதா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஷமி, சஹால், ஹர்திக் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை மறுநாள் 2-வது போட்டி நடைபெற உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/