Ind vs sl 2021Tamil News: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான இளம் வீரர்களை கொண்ட பட்டியல் ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ஷிகர் தாவனும், பயிற்சியாளராக 19 வயதுக்குட்பட்டோர் அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ராகுல் டிராவிட்டும் செயல்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ‘திறமையை வெளிப்படுத்த நினைக்கும் இளம் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் தொடர் ஒரு அருமையான வாய்ப்பு’ என இந்திய அணியின் மூத்த வீரரும், இலங்கை தொடருக்கான கேப்டனுமான ஷிகர் தவான் கூறியுள்ளார்.

இந்த தொடருக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதில் இலங்கை அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய அணியின் இளம் வீரர்கள் குறித்தும் பேசியிருந்தார். “இந்த குறுகிய தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது சாத்தியமில்லாதது. எனவே தொடரை வெல்வதற்கான சிறந்த அணி எதுவோ அதனை நாங்கள் தேர்வு செய்து விளையாட வைப்போம். ஆனாலும் ஷிகர் தவான் போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள இந்த தொடர் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்கிறார்.

பின்னர், இளம் வீரர் ப்ரித்வி ஷாவின் ரோல் இந்த தொடரில் எவ்வளவு முக்கியம் என்ற கேள்விக்கு, “ப்ரித்வி ஷா மட்டுமல்ல, அவரைத் தாண்டி நிறைய வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியமானது தான். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், தேவதூத் படிக்கல் போன்ற இளம் வீரர்களும் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருப்பார்கள். அதனால் ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி பேசாமல் இளம் வீரர்கள் அனைவருக்கும் இந்த தொடர் முக்கியமான தொடர் தான்” என்று டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த தொடரில் நம்முடைய இளம் வீரர்கள் பிரஷர் இன்றி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் அவர்கள் தேர்வாளர்களால் கவனிக்க படுவார்கள். விரைவிலே முதன்மை இந்திய அணிக்கு தேர்வாகவும் இந்த தொடர் ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்” என்றும் டிராவிட் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“