Advertisment

IND vs SL 2nd Test: 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

India vs Sri Lanka, 2nd Test Live Match Score Day 1 tamil: இரண்டாவது போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் ஸ்வீப் செய்தது

author-image
WebDesk
Mar 12, 2022 10:55 IST
New Update
IND vs SL 2nd Test: 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா; தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்

IND vs SL 2nd test match live score in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisment

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க்-பால் டெஸ்ட்) தொடங்குகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்தியா

இப்போட்டி இந்திய மண்ணில் அரங்கேறும் 3-வது பகல்-இரவு டெஸ்ட் ஆகும். இதற்கு முன் நடந்த 2 போட்டிகளில் இந்திய அணியே வெற்றியை ருசித்துள்ளது. எனவே, இன்று முதல் தொடங்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா அணியில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் விளாசியதுடன், மொத்தம் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்தார். ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷாப் பண்ட், அஸ்வின் ஆகியோரும் பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

இந்தியா அணியை பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. எனினும், கொரோனா பாதிப்பு மற்றும் பின்னங்கால் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் இந்த டெஸ்டில் விளையாட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கடந்தாண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த பிங்க்-பால் டெஸ்டில் அக்‌ஷர் பட்டேல் மட்டும் 11 விக்கெட்டுகளை சாய்த்து, அந்த அணியையே கலங்கடித்திருந்தார்.

தவிர, பெங்களூரு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் அக்‌ஷர் பட்டேல் தனது சுழலில் மாயாஜாலம் காட்டி, எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அவருடன் அஸ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோரும் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

தொடரை சமன் செய்யுமா இலங்கை?

திமுத் கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட எட்ட முடியாமல் சுருண்டது. அந்த அணிக்காக தொடக்க டெஸ்டில் முதல் இன்னிங்சில் 61 ரன் எடுத்த பதும் நிசாங்கா தற்போது முதுகு வலி காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணிக்கு அடுத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்ட வந்த இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் குசல் மென்டிஸ் தற்போது முழுவதுமாக குணமடைந்துள்ளார். அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, அணியின் கேப்டன் கருணாரத்னே, மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆனால் ஸ்கோர் போர்டில் தான் ரன்கள் வந்த சேர்ந்தபாடில்லை. இவர்கள் இன்றை ஆட்டத்திலும் சொதப்பும் பட்சத்தில் இலங்கை அணி ஒயிட்-வாஸுடன் நாடு திரும்ப வேண்டியதுதான்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்ப இந்த டெஸ்டில் வெற்றி பெற இலங்கை அணி போராடும் என்று நம்பலாம். அதேவேளையில் இந்த ஆண்டில் உள்ளூரில் விளையாடப்போகும் கடைசி டெஸ்ட் இது என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்கிற முனையில் இந்திய அணியில் தீவிரமாக செயல்பட இருக்கிறது. எனவே, இந்த பகலிரவு ஆட்டத்தில் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது.

பெங்களூரு மைதானம் எப்படி?

பெங்களூரு மைதானத்தில் இதுவரை அரங்கேறியுள்ள 23 டெஸ்டுகளில் இந்தியா 8-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 9-ல் டிராவும் அடைந்துள்ளது.

இலங்கை அணி இங்கு 1994-ம் ஆண்டு ஒரே டெஸ்டில் விளையாடி அதிலும் இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 626 ரன்கள் குவித்தது ஓர் அணியின் அதிகபட்சமாகும்.

2018-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 103 ரன்னில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும்.

இந்த மைதானத்தில் மொத்தம் 32 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 2012-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி 103 ரன்கள் எடுத்ததும் அடங்கும்.

சத தாகத்தை தீர்ப்பாரா கோலி?

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுவரை 70 சதங்களை அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, அவரது 71வது சதத்தை எப்போது அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு கோலிக்கு சொந்த ஊர் மைதானம் என்பதால் இங்குள்ள சூழல் அவருக்கு நன்கு தெரியும். எனவே அதற்கு ஏற்றால் போல் அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. தவிர, ஸ்டேடியத்தில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், களத்தில் அவரது உத்வேகம் நிச்சயம் அதிகரிக்கும். அதனால் நீண்ட கால சதம் ஏக்கத்தை அவர் தணிப்பாரா? என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

இரு அணிகளின் சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!

இலங்கை (பிளேயிங் லெவன்):

திமுத் கருணாரத்னே (கேப்டன்), லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, விஷ்வா பெர்னாண்டோ, பிரவீன் ஜெயவிக்ரம

இந்தியா (பிளேயிங் லெவன்):

மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா(கேப்டன்), ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா

முதல் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி களமிறங்கினர்.

இதில் மயங்க் அகர்வால் 4 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹனுமா விஹாரி சிதா ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 25 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட்கோலி, விஹாரியுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து விக்கெட் சரிவை தடுக்கும் நோக்கில் விளையாடிய விஹாரி 81 பந்துகளில்,  4 பவுண்டரியுடன் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து விராட்கோலி, 23 ரன்களிலும், அதிரடியாக விளையாடி விக்கெட் கீப்பர் பண்ட் 26 பந்துகளில் 7 பவுணடரியுடன் 39 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் ஜடேஜா 4 ரன்களிலும், அஸ்வின் 13 ரன்களிலும், அக்சர் பட்டேல் 9 ரன்களிலும், ஷமி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 92 ரன்களில் (98 பந்து 10 பவுண்டரி 4 சிக்சர்) கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.

59.1 ஓவர்களில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 10 பந்துகளில் ரன்கணக்கை தொடங்காமல் களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில் எம்புல்டானியா, ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், டிசில்வா 2 விக்கெட்டுகளும், லக்மல் 1 விக்கெட்டும் வீழத்தினர்

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு இந்திய அணி தொடக்கத்திலேயே செக் வைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் மென்டீஸ் 2 ரன்களிலும், கேப்டன் கருணரத்னே 4 ரன்களிலும், அடுத்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய திருமனே 8 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இலங்கை அணி 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இந்தது.

இந்நிலையில், 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முன்னாள் கேப்டன் மெத்யூஸ் ஒருபுறம் போராட மறுமுனையில், டிசில்வா 10, அசலஙகா 5 என ஆட்டமிழந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய மேத்யூஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. டிக்வெல்லா 13 ரன்களுடனும், எம்புல்டேனியா ரன் எதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில், பும்ரா 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் 1 விக்கெட்டும் வீழ்ததியுள்ளனர். தற்போதைய நிலையில், இந்திய அணி 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இலங்கை அணி முதல் நாளிளேயே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை 109 ரன்களுக்கு ஆல் அவுட்

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியில், எம்பல்தெனியா 1, லக்மல் 5 எடுத்து ஆட்டமிழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய டிக்வெல்லா 21 ரன்களிலும், பெர்ணாண்டோ 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கியது

இந்தியா 2 இன்னிங்ஸ்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இந்திய 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மயங்க் அகர்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். ரோகித் அரை சதத்தை நெருங்கிய நிலையில், 46 ரன்களில் அவுட் ஆனார். 79 பந்துகளைச் சந்தித்த ரோகித் தனஞ்ஜெயா பந்தில் மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பின்னர், கோலி களமிறங்கிய சிறிது நேரத்திலே, ஹனுமா விஹாரி அவுட் ஆனார். 35 ரன்களை அடித்த விஹாரி, ஜெயவிக்ரஹா பந்தில் போல்டானார். அடுத்ததாக களம் இறங்கிய ரிஷப் பண்ட் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்த சூழ்நிலையில் கோலி 13 ரன்களில் அவுட் ஆக, இந்திய அணி 178 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.

அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 31 பந்துகளில் அரை சதம் அடித்து அவுட் ஆனார். இதில் 7 பவுண்டரிகளும்  1 சிக்சர்களையும் ரிஷப் விளாசியுள்ளார். பின்னர் ஒருபுறம் ஸ்ரேயஸ் அய்யர் நிதானமாக ரன் குவிக்க, ஜடேஜா 22 ரன்களிலும், அஸ்வின் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அரை சதம் விளாசிய ஸ்ரேயஸ் 67 ரன்களில் அவுட் ஆனார். ஸ்ரேயஸ் 9 பவுண்டரிகளை விளாசினார். பின்னர் களமிறங்கிய 9 ரன்களில் அவுட் ஆக, ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் ரோகித்.

இந்திய அணி 2 ஆவது இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தது. இலங்கை தரப்பில் ஜெயவிக்ரமா 4 விக்கெட்களையும், எம்பல்தெனியா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் திரிமன்னே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணி கைவசம் உள்ள 9 விக்கெட்களுக்கு 419 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்பதால், நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

இந்தியா வெற்றி

419 ரன்களை இலக்காக கொண்டு இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியில், கருணரத்னே – மெண்டிஸ் ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. அந்த அணி 92 எடுத்திருந்தபோது மெண்டிஸ் ஆட்டமிழந்தார். மெண்டிஸ் 60 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக களம் இறங்கிய மேத்யூஸ் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த தனஞ்ஜெயா 4 ரன்னில் ஆட்டமிழக்க, இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் ஒருபுறம் திரிமண்னே நிலைத்து நின்று விளையாடினார். திரிமன்னே அரை சதத்தைக் கடந்து விளையாடி வருகையில், அடுத்ததாக களம் இறங்கியவர்களில், டிக்வெல்லா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் அடித்த கருணரத்னே 107 ரன்களில் அவுட் ஆக இலங்கை அணி தோல்வியை நோக்கி சென்றது. ஏனெனில் அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கங்களில் அவுட் ஆக இலங்கை அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த அணியில் அசலங்கா 5, எம்பல்தனியா 2, லக்மல் 1, பெர்ணாண்டோ 2 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்திய தரப்பில், அஸ்வின் 4 விக்கெட்களையும், பும்ரா 3 விக்கெட்களையும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஸ்ரேயஸ் அய்யர் ஆட்டநாயகன் விருதை வென்றார். ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதை வென்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#India #Sports #Rohit Sharma #Cricket #Indian Cricket Team #India Vs Srilanka #Ind Vs Sl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment