India-vs-srilanka | cricket | sports: இலங்கை மண்ணில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியானான இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டியானது நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்கிறது.
இலங்கைக்கு பெரும் பின்னடைவு - இந்தியாவை சமாளிக்குமா?
இந்நிலையில், நாளை ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது.
தீக்சனா ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பரிசோதனையில் அவரது காயம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் மகேஷ் தீக்சனா இடம் பெற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தீக்சனாவுக்கு பதிலாக சஹான் ஆராச்சிகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியில் ஏற்கனவே வனித்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். இந்த நிலையில், இலங்கையின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான மகேஷ் தீக்சனாவுக்கும் காயம் ஏற்பட்டு விலகியுள்ளார். இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. மேலும், நாளைய இறுதிப்போட்டியில் பலம் பொருந்திய இந்தியாவை சமளிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும், போட்டி சொந்த மண்ணில் நடப்பதால் இலங்கை திறம்பட செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“