இலங்கை சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
சமனில் முடிந்த இந்தியா - இலங்கை போட்டி
இந்த நிலையில், இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக துனித் வெல்லலகே 67 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, 231 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 47.5 வது அனைத்து விக்கெட்டையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், போட்டி சமனில் முடிந்தது.
சூப்பர் ஓவர் இல்லை
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சமனில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவர் நடைமுறை கடைபிடிக்கப்படும் என கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஏமாற்றத்துடன் வீட்டுக்கு சென்றனர். போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கை குலுக்கி விட்டு களத்தை விட்டு வெளியேறினர். அதனால், சூப்பர் ஓவர் இல்லை எனப் புரிந்து கொண்ட ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், சமனில் முடிந்த இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஏன் சூப்பர் ஓவர் வீசப்படவில்லை, இது குறித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விதிகள் கூறுவது என்ன என்பது பற்றியும் இங்குப் பார்க்கலாம்.
ஐ.சி.சி விதி
ஐ.சி.சி விதிகளின் படி எந்த ஒரு டி20 போட்டி சமனில் முடிந்தாலும் சூப்பர் ஓவர் நடத்தலாம். ஆனால், 50 ஓவர் போட்டிகளுக்கு அப்படி எந்த விதிமுறையும் இல்லை. ஒவ்வொரு தொடருக்கும் சூப்பர் ஓவர் தொடர்பான விதிகளை அந்த தொடரை நடத்தும் நாடு அல்லது அமைப்பு முடிவு செய்து கொள்ளலாம்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இந்த ஒரு நாள் தொடரில் அது போன்ற விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. எனவே, போட்டி சமனில் முடிந்து போனால், அத்துடன் போட்டி முடிவுக்கு வந்துவிடும். அதுதான் நேற்றைய ஆட்டத்தின் போதும் நடந்துள்ளது. ஐ.சி.சி நடத்தும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் நாக் -அவுட் போட்டிகள் சமனில் முடிவடையும் சுழலில் சூப்பர் ஓவர் நடைமுறையை கடைபிடிக்க விதி உள்ளது.
உதாரணமாக, 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின் போது போட்டி சமனில் முடிந்த நிலையில் சூப்பர் ஓவர் நடைமுறையை கடைபிடிக்கப்பட்டது. தவிர, இதுவரை மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டுமே சூப்பர் ஓவர் நடைமுறையை கடைபிடிக்கப்பட்டுள்ளது.
2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதி போட்டி, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த 2020 ஒருநாள் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே 2023 இல் நடந்த உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி ஆகிய மூன்று போட்டிகள் சமனில் முடிந்த சூழலில், அப்போது சூப்பர் ஓவர் நடைமுறையை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.