IND vs WI 1st ODI Live Score 2019: யாருமே எதிர்பார்க்காத மெடிக்கில் மிராக்கிளாக அமைந்த இந்திய - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு பிறகு, இன்று(ஆக.8) இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.
இந்தியா- விண்டீஸ் மோதிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3 - 0 என கைப்பற்றி, அந்த அணியை வெள்ளை கழுவல் செய்தது. அதாங்க ஒயிட் வாஷ்!!
இந்நிலையில், இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இதில், முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. குளோபல் டி20 தொடரில் 'சாத்தல்' சாகசத்தை முடித்த பிறகு, விண்டீஸ் அணியில் க்றிஸ் கெயில் மீண்டும் இணைந்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் ஆடுகிறார். தவிர, வெஸ்ட் இண்டீஸின் பெரிய தலைவலியாக இருப்பது ஓப்பனிங் தான். அதை ஓப்பனாக ஒப்புக் கொண்டு மாற்று செய்யாத வரை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து தடுமாறிக் கொண்டே இருக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய ஷிகர் தவான் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்புகிறார். இதனால், லோகேஷ் ஆர்டர் மீண்டும் நான்காம் ஸ்லாட் செல்கிறார். மற்றபடி, டி20 அணிக்கும், ஒருநாள் அணிக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. ஃபேஸ் பவுலர் நவ்தீப் சைனியிடம் இருந்து ரசிகர்களும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள், தேர்வுக்குழுவும் அதிகம் எதிர்பார்க்கிறது. இந்த ஒருநாள் தொடரில் மட்டும் அவர் இம்ப்ரெஸ் செய்துவிட்டால், பும்ராவின் சரியான பவுலிங் ஜோடியாக உருவாக வாய்ப்பிருக்கிறது.
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும். கயானாவின் புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு களிக்கலாம்.
கொசுறு: இன்னும் 11 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள்(10,405) எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பிரைன் லாராவின் சாதனையை க்றிஸ் கெயில் முறியடிப்பார்.