India vs West Indies, 1st T20I score in tamil: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்று பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முன்னதாக நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்கிற கணக்கில் தவான் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 8 மணிக்கு தொடங்கும் முதலாவது டி-20 ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் போன்றோர் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சில் வரிசையில் அஸ்வின், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர்குமார், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் ஆகிய வீரர்கள் உள்ளனர். முன்னதாக நடந்த ஒரு நாள் தொடரில் அணியை வழிநடத்திய ஷிகர் தவான், தொடர்நாயகன் சுப்மான் கில் ஆகியோருக்கு அணியில் இடமில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி நிகோலஸ் பூரன் தலைமையில் விளையாடுகிறது. ரோவ்மேன் பவல், ஆல்-ரவுண்டர்கள் ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் அந்த அணிக்கு போதுமான பேட்டிங் ஃபயர்பவரை வழங்குகிறார்கள். இவர்களுடன் ஷிம்ரோன் ஹெட்மியரின் வருகை அணிக்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளது.
ஷமர் ப்ரூக்ஸ், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய் உள்ளிட்டோர் வேகத் தாக்குதல் தொடுக்க காத்திருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர்களில், அகேல் ஹொசைன் கட்டுப்பாட்டுடன் பந்துவீசியுள்ளார். மேலும் ஏமாற்றும் வித்தையையும் கொண்டுள்ளார். ஹெய்டன் வால்ஷ் ஜே.என்.ஆர் அணியில் இரண்டாவது முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.
நேருக்கு நேர்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி-20 கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 6-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன, ஒரு ஆட்டத்திற்கு முடிவு எட்டப்படவில்லை.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
வெஸ்ட் இண்டீஸ் அணி:
நிக்கோலஸ் பூரன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்ஜாரி ஜோசப், ஓபேட் மெக்காய், ஹேடன் வால்ஷ், அக்கேல் ஹொசைன், ஷாமின் ப்ரோக், ஷாமின் ப்ரோக் பால்ஸ் டிரேக்ஸ், டெவோன் தாமஸ்
இந்தியா அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிச்சந்திரன் படேல் ஐயர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், இஷான் கிஷன்
இரு அணிகளின் உத்தேச வீரர்கள் விபரம் பின்வருமாறு:-
வெஸ்ட் இண்டீஸ் அணி:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓபேட் மெக்காய் மற்றும் ஹேடன் வால்ஷ் ஜூனியர்/அல்ஸாரி ஜோசப்
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த், தீபக் ஹூடா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், ஆர் அஷ்வின் அல்லது குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) நடைபெற்றது.
முதல் 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர்.
ரோகித் சர்மாவும் சூர்யகுமார் யாதவும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சூர்யகுமார் யாதவ் 24 ரன்னில் அகீல் ஹோசெய்ன் பந்தில் ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்ரேயஸ் அய்யர் 4 பந்துகளை சந்தித்து ஒபெட் மெக்காய் பந்தில் அக்கீல் ஹோசெய்ன் இடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த, ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்கள்.
ஆனாலும், மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். 44 பந்துகளில் 7 ஃபோர், 2 சிக்சர்களை விளாசி 64 ரன் எடுத்திருந்த ரோகித் சர்மா, ஜேசன் ஹோல்டர் பந்தில் ஷிம்ரன் ஹெட்மேயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இதன் மூலம், 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் சமார் புரூக்ஸ் களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் 15 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் ரன் ஏதுமின்றி, ஜடேஜாவின் பந்து ஸ்டம்பை பதம் பார்க்க போல்ட் ஆனார். சமார் புரூக்ஸ் 20 ரன்களிலும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஷ்னாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் வெற்றியை சுவைத்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.