/indian-express-tamil/media/media_files/2025/10/02/ind-vs-wi-1st-test-live-cricket-score-india-vs-west-indies-test-match-live-score-updates-ahmedabad-test-in-tamil-2025-10-02-09-38-26.jpg)
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது.
முதல் நாள் ஆட்டம் - வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக டேகனரைன் சந்தர்பால் - ஜான் கேம்ப்பெல் ஜோடி களமிறங்கி மட்டையைச் சுழற்றினர். இதில் டேகனரைன் சந்தர்பால் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதேபோல் மற்றொரு தொடக்க வீரரான ஜான் கேம்ப்பெல் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு களத்தில் இருந்த அலிக் அதானாஸ் - பிராண்டன் கிங் ஜோடியில் பிராண்டன் கிங் 13 ரன்னிலும், அலிக் அதானாஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனால் 12 ஓவரில் 42 ரன்னுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது தவித்தது வெஸ்ட் இண்டீஸ். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் - ஷாய் ஹோப் அணியை விக்கெட் சரிவில் இருந்து மீட்டனர். அடுத்த 10 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்த ஜோடியில் ஷாய் ஹோப் 26 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 32 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய சிராஜ் 4 விக்கெட்டையும், பும்ரா 3 விக்கெட்டையும், குலதீப் 2 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்தியா பேட்டிங்
தொடர்ந்து இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல் ராகுல் மட்டையைச் சுழற்றி வருகிறார்கள்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பின்வருமாறு:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ்: டேகனரைன் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல், அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஜோமெல் வாரிக்கன், காரி பியர், ஜோஹன் லெய்ன், ஜேடன் சீல்ஸ்.
நேரலை ஒளிப்பரப்பு
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அதன் இணைய பக்கத்தில் நேரலையில் பார்த்து மகிழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.