IND vs WI Online Streaming: நீண்ட ஐபிஎல் தொடருக்குப் பிறகு நடைபெற்ற உலகக் கோப்பை நிறைவுற்ற பிறகு ஏனோ ஒருவித அயற்சி ரசிகர்கள் மத்தியில் நிலவியது. வீரர்களுக்கும் நிச்சயம் அந்த அயற்சி இருந்ததோ என்னவோ.. இதனால், நடைபெற்று வரும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சீரிஸ் 'அப்படியா!' மோடிலேயே உள்ளது. இத்தனைக்கும் ஒருநாள் தொடரில் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2 சதங்கள் அடித்தும், இத்தொடர் லைம் லைட்டுக்கு வரவேயில்லை.
இதற்கு முக்கிய காரணம், கால நேரம். இரவு 7 மணிக்கு தான் போட்டியே தொடங்குகிறது. ஒருநாள் போட்டி பார்க்க வேண்டுமெனில், விடிய விடிய உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். இதனாலேயே, இந்த சீரிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் பிலோ ஆவரேஜாகவே இருக்கிறது.
டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வாஷ் அவுட் செய்திருக்கும் நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று(ஆக.22) தொடங்குகிறது.
டெஸ்ட்டில் நம்பர் 1 அணியாக வலம் வரும் இந்திய அணியில்,
ரோஹித் ஷர்மா, விராட் கோலி, மாயங்க அகர்வால், புஜாரா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா(w), ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம் ஃபாஸ்ட் டிராக் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
India vs West Indies 1st Test Live Streaming
இந்திய கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்ட் தொடரில் சதம் அடித்தால், ஒரு கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ரிக்கிபாண்டிங்கின் (19 சதம்) சாதனையை சமன் செய்வார். வெற்றி கண்டால் டெஸ்டில் அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டனான தோனியின் சாதனையை சமன் செய்வார்.
இந்த தொடரில் இருந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகிறது. இதன் வெற்றி தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வெற்றிப் பெறும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக 60 புள்ளிகள் வழங்கப்படும். இதனை கருத்தில் கொண்டும் இரு அணி வீரர்களும் விளையாடுவார்கள்.
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும். சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.