இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நேற்று முன்தினம்(ஆக.22) தொடங்கியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரஹானே 81, ரவீந்திர ஜடேஜா 58 ரன்கள் எடுக்க 296 ரன்களை எட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
தேநீர் இடைவேளை முடிந்த பிறகு, பிராவோ 18 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யு முறையில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப் பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் பும்ரா படைத்தார்.
11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார் பும்ரா.
Ind vs Wi 1st Test 3rd Day
அடுத்த இடங்களில் வெங்கடேஷ் பிரசாத் / ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான் / ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்), காவ்ரி / கபில் தேவ் (16 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
அதேபோல ஒட்டு மொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும். சோனி பிக்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டியை நேரடியாக காணலாம். அதே போல், ஆன்லைனில் SonyLIVல் போட்டியை லைவாக காணலாம்.