IND vs WI 2nd ODI Score 2019: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்ய, இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோஹித் - ராகுல் நிதானமான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். மெல்ல மெல்ல அரைசதம் கடந்த இருவரும், அதற்கு பிறகு, ரன் ரேட் 6 என்பதை மெயின்டெய்ன் செய்யும் அளவுக்கு விளையாடினர். ரோஹித், 4த் கியருக்கு மாற, ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. லோகேஷ் ராகுலும் பார்ட்டியில் கலந்து கொள்ள 'செத்தாண்டா சேகரு' கதையானது வெஸ்ட் இண்டீஸ்.
லோகேஷ் ராகுல் 102 ரன்களும், ரோஹித் 159 ரன்களும் குவித்து ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட்டானார்.
பிறகு பண்ட் 16 பந்துகளில் 39 ரன்களை வெடிக்க, ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் விளாசினார். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.
பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 43.3வது ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ், தனது சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது ஹாட்ரிக்கை கைப்பற்றினார்.
அதிகபட்சமாக ஷாய் ஹோப் 78, நிகோலஸ் பூரன் 75 ரன்கள் எடுத்தனர்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன.