Advertisment

IND VS WI: 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா... தொடரையும் கைப்பற்றியது

India vs West Indies; second T20I of the three-match series Tamil News: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடக்கிறது.

author-image
WebDesk
Feb 18, 2022 10:44 IST
New Update
IND VS WI: 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா... தொடரையும் கைப்பற்றியது

India vs West indies  2nd T20I Live updates Tamil News: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், கடந்த புதன் கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisment

இந்த நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி அதே கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடக்கிறது. இதனையடுத்து, இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

ஸ்ரேயாஸ் ஐய்யருக்கு இடம் இல்லை; சாஹருக்கு ஓய்வளிக்க வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுதுமாக வசப்படுத்துவதை உறுதி செய்தார். தற்போது நடந்து வரும் டி20 தொடரிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இந்த தொடரையும் இந்தியா கைப்பற்றுவதே அவரின் இலக்காக இருக்கும்.

முதலாவது ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இளம் வீரர் இஷான் கிஷன் (35 ரன்), கேப்டன் ரோகித் (40 ரன்), சூர்யகுமார் யாதவ் (34 ரன்) அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். இதேபோல், பந்துவீச்சில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மேலும், ஆட்டத்தின் நாயகனாகவும் ஜொலித்தார்.

இந்த ஆட்டத்தில், பொல்லார்ட் அடித்த வலுவான ஷாட்டை தடுக்க முயன்ற வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு அவரது வலது கையில் சிறிது காயம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. 6வது பந்துவீச்சாளராக ஆல்-ரவுண்டர் வீரர் வெங்கடேஷ் ஐயர் அணியில் இணைத்துள்ள நிலையில், மிடில்- ஆடர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐய்யருக்கு இன்றைய ஆட்டத்திலும் இடம் கிடைப்பது சந்தேகம் தான். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை.

தொடர்ந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் பறிகொடுத்துள்ள நிலையில், டி-20 தொடரிலும் அந்த அணி தடுமாறி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் (61 ரன்) கைல் மேயர்ஸ் (31 ரன்) ஆகிய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால், மிடில்- ஆடரில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

"6 முதல் 15 ஓவர்களில் 49 ரன் மட்டுமே எடுத்தோம். இந்த கட்டத்தில் இன்னும் 18-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், இந்தியாவுக்கு ஒரு சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். இதேபோல், ரன் எடுக்காமல் அதிகமான பந்துகளை வீணடித்து விட்டோம். அதில் முன்னேற்றம் தேவை" என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் போட்டிக்கு பிறகான பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தை எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்றைய ஆட்டத்தையும் வென்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதேவேளையில், தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க, இன்றைய ஆட்டத்தை வெல்ல வெஸ்ட் இண்டீஸ் அணியினர் போராடுவார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

அயல்நாட்டு மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக விளையாடிய 12 டி20 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மா இஷான் கிஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிங்கினர், இதில் தொடக்க ஆட்டக்காரராக சொதப்பி வரும் இஷான் கிஷான் 10 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து கார்டல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட்கோலி கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடி வருகிறார் சற்றுமுன்வரை இந்திய அணி 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 11 ரன்களுடனும், விராட்கோலி 14 ரன்களுடனும் இருந்தனர்.

இந்த ஜோடி 49 ரன்கள் சேர்ந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில், ராஸ்டன் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டியில் வெற்றியை நோக்கி பயணிக்கவைத்த நிலையில், இந்த போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரி்ந்தாலும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய முன்னாள் கேப்டன் விராட்கோலி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரிஷப் பண்ட் அவருக்குஒத்தழைப்பு கொடுத்து விளையாடினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்த நிலையில், அரைசதம் கடந்த விராட்கோலி 52 ரன்களில் ராஸ்டன் சேஸ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் பண்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிரடியாக ஆடிய பண்ட் அரைசதம் கடந்த நிலையில், மறுமுனையில் வெங்கடேஷ் அய்யர் கடைசி ஓவரில் போல்ட் ஆனார். 18 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. பண்ட் 28 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில், ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளும், ரிமரியே மற்றும் கார்ட்டல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 187 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், கைல் மேயர்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 30 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8.3 ஓவர்களில் 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ்அணிக்கு 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவன் பவல நிக்கோலஸ் பூரன் ஜோடி இந்திய பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது.

இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணி மேற்கொண்ட முயற்சிக்கு விரைவில் பலன் கிடைக்கவில்லை. இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த நிலையில், கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நிக்கோலஸ் பூரன் விக்கெட் வீழ்ததினார். அணியை சரிவில் இருந்து மீட்ட பூரன் 41 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் பட்டேல் வீசிய அந்த ஓவரில் முதல் இரு பந்துகளில் ரன்கள் கிடைத்த நிலையில், 3-வது மற்றும் 4-வது பந்தில் ரோவன் பவல் 2 சிக்சர்களை விளாசினார். ஆனால் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர், சஹால், பிஷ்னாய் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழத்தினது இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Sports #Rohit Sharma #Cricket #Indian Cricket Team #Kolkata #India Vs West Indies #Pollard
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment