வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், இந்தியா தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் வியாழக்கிழமை (20ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
இந்த நிலையில், 2-வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் இன்று அறிவித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரேமன் ரெய்பர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளார். அவர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்து 2 மற்றும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழு, புதுமுக வீரர் ஆல்-ரவுண்டர் கெவின் சின்க்ளேரை 2-வது டெஸ்ட்டிற்கு தேர்வு செய்து உள்ளது. கெவின் சின்க்ளேருக்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் ஆகும்.
சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சின்க்ளேர், ஏழு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.மேலும் 18 முதல்தர ஆட்டங்களில் விளையாடி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சராசரியாக 29 மற்றும் 23.98 வைத்து உள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்காளதேசம் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி, மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரக்கீம் கார்ன்வால் முதல் டெஸ்ட் போட்டியின் போது உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் களத்தை விட்டு வெளியேறினார். தற்போது அவர் குனமடைந்ததால் இரண்டாவது டெஸ்டிற்கான குழுவில் இடம்பிடித்து உள்ளார்.
2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பட்டியல்:
கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டேகனரைன் சந்தர்பால், ரக்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சியர், கெமர் ரோச்,கெவின் சின்க்ளேர் மற்றும் ஜோமல் வாரிக்கன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.