India vs West Indies, 4th T20 score updates in tamil: வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடத் தொடங்கியது. தொடக்கம் முதலே தடுமாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
நன்றாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு குறைவில்லாத வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் தலா 24 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா .
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால், தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகள் மோதும் 4 வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் தலா ஒரு அரைசதம் அடித்ததன் மூலம் ஓரளவுக்கு நல்ல ஃபார்மில் உள்ளனர். அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஓபேட் மெக்காய் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவரது பந்துவீசும் அங்கிள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் உள்ளது. இதேபோல், சுழற்பந்துவீச்சாளர் அகேல் ஹொசின் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பேட்டிங் பெரும் பின்னடைவாக இருக்கிறது. அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். கேப்டன் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர் மற்றும் ரோவ்மேன் பவல் ஆகிய மூவரும் இணைந்து 136 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியா போன்ற ஒரு அணிக்கு எதிராக, சேசிங் செய்யும் போது, அந்த அணி கடைசியாக விளையாடிய 21 ஆட்டங்களில் 2ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. எனவே அந்த அணியின் பேட்டிங் வரிசை ஒரு சேர ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஏற்கனவே தொடரில் முன்னிலையில் உள்ள இந்திய அணி தொடரை கைப்பற்ற இன்று தீவிரம் காட்டும். கடந்த போட்டியில் காயத்தால் வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மா, முழுவதுமாக குணமடைந்துவிட்டார். இதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவார் எனத் தெரிகிறது. பந்துவீச்சில், கரீபியன் தீவுகளில் விக்கெட்டுகளின் மெதுவான மற்றும் வேக இயல்புக்கு அவேஷ் கான் அதிகம் சிரமப்பட்டார். மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைப் போலல்லாமல், அவேஷ் கான் தனது வேகத்தை மாற்ற முடியவில்லை.
இந்திய அணியின் மிடில்- ஆடரில் களமாடும் ஷ்ரேயாஸ் ஐயரின் சுமாரான ஸ்கோர்கள் கவலைக்குரிய மற்றொரு காரணமாக உள்ளது. மெக்காயின் ஷார்ட் பந்திற்கு எதிராக ஷ்ரேயாஸ் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம் இருக்கிறார். அவர் மீது அணி நிர்வாகம் போதுமான நம்பிக்கையை காட்டியிருந்தாலும், அவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படலாம்.
இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நடப்பாண்டில் நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பைத் தேர்வுக்கான அணியில் இடம்பிடிப்பார் என்றால் ஆச்சரியமில்லை. அணியின் பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ் திறம்பட செயல்பட்டுள்ளார். 3வது ஆட்டத்தில் 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு உதவினார்.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வெல்ல இந்திய அணியும், தோல்விக்கு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் காத்திருக்கின்றன. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இரு அணியின் வீரர்கள் பட்டியல்:-
வெஸ்ட் இண்டீஸ்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், ஷிம்ரோன் ஹெட்மியர், டெவன் தாமஸ் (விக்கெட் கீப்பர் ), ஜேசன் ஹோல்டர், டொமினிக் டிரேக்ஸ், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய், ஒடியன் ஸ்மித், கீமோ பால், ஷமர் ப்ரூக்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ்
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், சஞ்சு சாம்சன் , அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷான் கிஷன்
இரு அணி விளையாடும் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
வெஸ்ட் இண்டீஸ்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பவல், ஷிமோன் ஹெட்மியர், டெவன் தாமஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், டொமினிக் டிரேக்ஸ், அகேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தியா 191/5
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவ்வும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடி வந்த ரோகித் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக தீபக் ஹூடா களமிறங்கி நிதானமாக ஆடி வர, சற்று நேரத்திலே சூர்யகுமார் 14 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
அடுத்து தீபக் உடன் ஜோடி சேர்ந்த பண்ட் அதிரடியாக ஆடினார். இதனிடையே நிதானமாக ஆடிய தீபக் 21 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து பண்ட் உடன் ஜோடி சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் பட்டேல் கடைசி கட்ட ஓவர்களை விளாச இந்திய அணி இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. சாம்சன் 23 பந்துகளில் 30 ரன்களிலும், அக்சர் 8 பந்தில் 20 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்கே, ஜோசப் தலா 2 விக்கெட்களையும், ஹொசைன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
192 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடி வருகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.