IND vs WI 4th T20I 2023, Florida Weather & Pitch Report Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த 3 ஆட்டங்களில் 2ல் வெஸ்ட் இண்டீசும், 1ல் இந்தியாவும் வென்றுள்ளன. இதனால், தொடரில் 2 - 1 என்கிற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது. முதல் 3 போட்டிகளில் முதல் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2-வது ஆட்டத்திலும் இதே போல நெருங்கி வந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதன்பின்னர், 3வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.
இந்த நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் லாடர்ஹில் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
மைதானம் எப்படி?
2007ல் உருவாக்கப்பட்ட லாடர்ஹில் மைதானம் 2010 முதல் டி20 போட்டிகளை நடத்தி வருகிறது. இங்கு இதுவரை 14 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 9 போட்டிகளில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வெறும் 3 வெற்றியும் 5 தோல்விகளையும் சந்தித்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மறுபுறம், 2016ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு ரன்னில் தோற்றதை தவிர்த்து இந்த மைதானத்தில் களமிறங்கிய 6 போட்டிகளில் இந்தியா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்த அளவுக்கு இந்தியாவுக்கு ராசியாக இருக்கும் இந்த மைதானத்தில் அதிக டி20 ரன்கள் அடித்த வீரராக ரோஹித் சர்மா (5 இன்னிங்ஸில் 196 ரன்கள்) சாதனை படைத்துள்ளார்.
இந்த மைதானத்தில் சதமடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார் (110*, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2016). டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை (6) எடுத்து சிறந்த பந்து வீச்சை (4/16) பதிவு செய்த இந்திய பவுலராக ரவி பிஷ்னோய் உள்ளார். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட் ச ஸ்கோர் - 245/6, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2016 ஆகும்.
பிட்ச் ரிப்போர்ட்
லாடர்ஹில் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்த உதவுகிறது. ஃபிளாட்டாக உள்ள பிட்ச் என்பதால் ரன் வேட்டையை எதிர்பார்க்கலாம். இங்கு நடந்த 14 டி20 போட்டிகளில் 3 முறை 200க்கும் மேல் ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடுகளத்தில் நேரம் செல்ல செல்ல மீடியம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதனால் இங்கு சேசிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 165 ரன்கள், 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 123 ரன்களாக உள்ளது.
இங்கு நடந்த 14 போட்டிகளில் 11 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 2 முறை மட்டுமே சேஸிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே, இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம்.
மழை வாய்ப்பு எப்படி?
லாடர்ஹில் நகரில் போட்டி நாளன்று சராசரியாக 20% மழை மட்டுமே பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 5வது போட்டி நடைபெறும் நாளன்று 50% மட்டும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த 2 போட்டிகளுமே முடிவு கிடைக்கும் அளவுக்கு முழுமையாக நடக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.