India vs West Indies Series: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான டி 20 தொடரை முழுமையாக வென்று ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. கடைசிப் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிக்கு துணை நின்ற ரிஷப் பாண்டுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே முதல் இரு டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சி.எஸ்.கே வீரரான தீபக் சாஹர் அணியில் இடம் பெற்று, தனது முதல் ஸ்பெல்லை அட்டகாசமாக வீசினார். வெறும் 4 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தி மேற்கு இந்திய தீவு அணியின் டாப் ஆர்டரை சீர்குலைத்தார் அவர். 4-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு- புரான் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். புரான் 17 ரன்களிலும், பொல்லார்ட் 58 ரன்களிலும் சைனி பந்து வீச்சில் வெளியேறினார். இறுதியில் பவுல் 20 பந்துகளில் 32 ரன்கள் விளாச இந்திய அணிக்கு 147 ரன்களை வெற்றி இலக்காக மே.இ.தீவுகள் அணி நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், சைனி 2 விக்கெட்டும், ராகுல் சாஹர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 1.6வது ஓவரில் தாமஸ் வீசிய பந்தில் தவான் 3(5) ரன்கள் எடுத்து அவுட்டானார். 4.4வது ஓவரில் ராகுல் 20(18) ரன்கள் எடுத்து அவுட்டானார். அதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் களம் இறங்கி கோலியுடன் இணைந்தார். 17.3 வது ஓவரில் 45 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அணியின் கேப்டன் கோலி அவுட் ஆனார்.
இறுதியில் ரிஷப் பண்ட் 42 பந்துகளை சந்தித்து 65 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இந்த வெற்றி மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியை முழுமையாக ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.
சமீப ஆட்டங்களில் ஃபார்ம் இன்றி திணறிய பண்ட், நேற்று தனது திறமையை நிரூபித்தார். வெற்றிக்கு பிறகு பேசிய விராட் கோலி, ‘ரிஷப் பாண்ட், இந்திய அணியின் எதிர்காலம். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அதேசமயம் அவருக்கான இடத்தை வழங்க வேண்டும். அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை’ என்றார்.
அடுத்து இந்திய அணி, ஒருநாள் தொடரில் மோத இருக்கிறது.